அறிமுகம்...

My photo
சென்னை, தமிழகம், India
இலக்கியம், பயணம், மனிதர்கள், இசை, உணவு, நட்பு, சமுதாயம், கலை - இவை என் ஆர்வங்கள். பகிர்தலில் இன்பம் கொண்ட எல்லோருக்கும் நான் நண்பன். என்னை தொடர்ப்பு கொள்ள: muthu.gvmuthu@gmail.com / 9894238404

Tuesday, March 31, 2009

உண்மை விளம்பி...

வதந்திகள் உலகம் முழுவதும் வேறுபாடில்லாமல் பரவும் சுவரஸ்யமான கதைகள். கணிப்பொறி, தொழில், வரலாறு, அறிவியல், மொழி, நீதித்துறை, உணவு, குற்றம், பயங்கரங்கள், காதல், ராணுவம், திரைப்படங்கள், விளையாட்டு - இன்னும் மதம் கூட இந்த வதந்திகளுக்கு தப்பவில்லை. இன்றைய இணைய உலகில் முன்பை விட வேகமாக ஒரு விளையாட்டு போல வதந்திகள் பரவுகின்றன. யாருக்கும் நின்று உண்மை என்னவென்று ஆராய நேரமில்லை - அது உண்மை செய்தியாக இருந்தாலும் தங்களை பாதிக்காதவரையில் "மெய் பொருள் காண்பது அறிவு" என்பது பற்றியெல்லாம் கவலையில்லாமல் தொழில் பார்த்து கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் ஒரு சிறிய இணையதளம் இத்தகைய வதந்திகளையும் அதன் உண்மை செய்திகளையும் திரட்டி வெளியிட்டு கொண்டிருக்கிறது. ஆங்கில மொழியிலான இந்த தளம் படிக்க சுவரஸ்யமானது மட்டுமின்றி - ஏமாற்று கதைகளுக்கு உண்மையான விடை சொல்லவும் செய்கிறது. ஏப்ரல் 1 - முட்டாள்களின் தினமான இன்று இதனை பதிவித்தல் பொருத்தமானதாக நினைக்கிறேன்.

இணைய முகவரி: http://www.snopes.com/

நம்மால் முடியுமா..!

'Children of Heaven' என்று ஒரு திரைப்படம் - நிறைய பேருக்கு அறிமுகமாகியிருக்கும். குழந்தைகளுக்கான திரைப்படம் என்ற நிலையில் இருந்து கொஞ்சம் வளர்ச்சி பெற்று பெரியவர்களின் வாழ்க்கை சங்கடங்களையும் பேசும் இது போன்ற படங்களை பார்க்கும் போது தமிழில் இது போன்ற படங்கள் மிக குறைவு என்பது வருத்தமான உண்மை. இந்தியில் சில படங்கள் வந்திருக்கின்றன எனினும் வணிக ரீதியாக பெரிய வெற்றி பெற்றதில்லை. குழந்தைகளை வைத்து எடுக்கபடும் நம் திரைப்படங்கள் - கூடவே ஆடு, பாம்பு எனவும் கதை சொல்கின்றன. "பசங்க" திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் கமல் சொன்னது போல - போதை ஏற்றும் ஒரு படம் வேண்டும் என்றால் வருமானம் கணக்கில் கொண்டு தயங்காமல் தரும் சினிமா (தன்னையும் சேர்த்து) - வர்த்தகரீதியான வெற்றி இல்லாத குழந்தைகள் மற்றும் யதார்த்த சினிமாவை விட்டு விலகி நிற்கிறது. குறும்படங்கள் அளவிலாவது குழந்தைகளுக்கான கதைகள் படமாக்கபடலாம். அது நிச்சயம் கதாநாயகதன்மை கொண்ட "சூப்பர் மேன்" / "சக்திமான்" படங்களாக இல்லாமல் - இன்றைய சமூகம் மறந்து போன நல்வாழ்வு / நீதி கருத்துகளை (மாரல் சைன்ஸ்) மையமாக கொண்டு வரவேண்டும்.. நாளைய சமூகத்தில் வெறும் காசு பார்க்கும் இயந்திரங்களாக இருக்காமல் கொஞ்சமாவது மனித நேயம் வேண்டும் என்றால் - வெற்றி என்பது பிணங்களின் மீது கிடைப்பதல்ல என்பது புரியவைக்க படவேண்டும்...சக மனித வாழ்வு பற்றிய பார்வை சொல்லபட வேண்டும்... யாரையும் மதிக்கும் உணர்வும் வளர்க்கப்பட வேண்டும் - இதற்க்கு சினிமா சரியான ஒரு ஊடகம்.

புரியாத சில கேள்விகள்...

சென்னையில் ஆங்காங்கே திடீர் போஸ்டர்கள் முளைக்கும். "ஈழத்தமிழர்" நல்வாழ்வை முன்னிட்டு உண்ணாவிரதம்.. பொதுக்கூட்டம்.. கண்டனம்.., "இஸ்ரேல்" அராஜத்தை கண்டித்து கண்டனம்..பொதுக்கூட்டம்.. உண்ணாவிரதம்.., .. இன்னும் எங்கேல்லாம் ஏதாவது நடக்கிறதோ அதனை கண்டித்து ஆர்பாட்டங்களுக்கு அழைப்புகள்.. எல்லாம்.. எனக்கு ஒரு கேள்வி ரொம்ப நாளாக - (படித்து முடித்தவுடன் நான் எல்லா அரசியல் படுகொலையாளிகளின் ஆதரவாளர் என்ற சந்தேகம் எழுந்தால் - மறுபடி ஒருமுறை நிதானமாக படித்து உண்மை அர்த்தத்தை புரிந்து கொள்ளவும்).

நம் அரசியலமைப்புக்கு கட்டுபடாத அடுத்த நிலப்பரப்பில் நடக்கும் எந்த படுகொலைகளும், அராஜங்களும், அரசியல் புரட்சிகளும், இன அழிப்பு நடவடிக்கைகளும் இங்கே நடக்கும் எந்த கண்டன பொது கூட்டத்தாலும், உண்ணாவிரதத்தாலும், ஆர்பாட்டங்களாலும் - தற்கொலைகளாலும் - தடுத்து நிறுத்தபட போவதில்லை என்பது பெரும்பாலும் எல்லாருக்கும் புரியும் உண்மை. அப்புறம் எதற்கு இந்த குழப்பமான போராட்டங்கள்...!!! போராட்டம் நடத்தும் எவரும் ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு மேல் அந்த பிரச்சனையை கண்டு கொள்ளாமல் விடுவது ஏன்...!! போராட்டங்கள் தாண்டி - மருத்துவ உதவி, உணவு பிரச்சனைகள், அகதிகள் பாதுகாப்பு மற்றும் கல்வி போன்ற விஷயங்களில் ஈடுபடாமல் கட்சி, கூட்டணி, பதவி என கவனம் செலுத்துவது ஏன்...!! பொருளாதார அளவிலும், ராணுவ அளவிலும் பெரிய உலக நாடுகள் விடுக்கும் எந்தவொரு வேண்டுகோளையும் எச்சரிக்கைகளையும் கண்டு கொள்ளாத அரசியல் படுகொலையாளிகள் - இங்கே நடக்கும் போராட்டங்களுக்கும், வாய் சவடால்களுக்கும் பயந்து (!!!) திருந்தி விடுவார்கள் என நம்புவது ஏன்..!! ஆயுத வியாபாரம் நடத்தும் யுத்தங்கள் நம்மை சுற்றி என்றும் காத்திருக்கின்றன என்ற உண்மை புரியாதது போல நடிப்பது ஏன்..!!! அறிவு ஜீவிகள் என்று சொல்லி கொள்பவர்கள் கூட இந்த குழப்பங்களை ஆதரித்து அறிக்கை (ஒரு பிரயோஜனமும் இல்லாதது..!!) விடுவது ஏன்..!! தங்கள் அடிப்படை கொள்கைகளின் (அப்படி ஒன்று இருந்தால்) வழியில் நடப்பதை கூட சரியாக செய்யாத கட்சிகளையும் (ஆளும்கட்சி, எதிர்கட்சி மற்றும் எல்லாம் கொத்து புரோட்டா கட்சிகளையும்) தலைவர்களையும் நம்பி - இவர்கள் அரசியல் சமூக அளவில் மாற்றங்களை கொண்டு வருவார்கள் என நம்பி - புரட்சிகரமான (!!!) முடிவுகளை சிலர் எடுக்க காரணம் என்ன..!! ஈழத்து பிரச்சனையை பொருத்தவரை - இந்தியா உட்பட எல்லா நாடுகளும் + போராட்டம் நடத்துபவர்களும் இதனை ஒரு சக மனித பிரச்சனையாக பாராமல் "தமிழர்" பிரச்சனையாகவே கொள்வது ஏன்..!! பாகிஸ்தானிலும், இலங்கையிலும் சிறையில் இருக்கும் இந்திய மீனவர்களை / இந்திய கைதிகளை மீட்பது குறித்து அவ்வப்போது வெத்து போராட்டங்கள் மட்டுமே நடத்தும் அரசியல்வாதிகள் - நம் தேசத்தை சேர்ந்த அவர்களை கூட காப்பாற்ற முடியாத அரசியல்வாதிகள் - தேனும் பாலும் ஓட வைப்பார்கள் என்ற நம்பிக்கையை இன்னும் மக்கள் கொண்டிருப்பது ஏன்..!! சினிமா நடிகர்களையும், நடிகைகளையும் வைத்து கொள்கை நம்பிக்கை இல்லாமல் கவர்ச்சி பிரச்சாரம் செய்யும் அரசியல் கட்சிகள்... "கையை வெட்டுவேன்" என்று பேசும், ஒரு மாநிலமே பற்றி எரிந்தது எனும் போதிலும் - நல்ல அரசியல்வாதி என சான்றிதழ் வாங்கிய அரசியல்வாதிகளும், சுய ஆதாயங்களை மட்டுமே குறியாக மாநில அரசியல் கட்சிகள்.. இவர்களை இன்னும் மக்கள் நம்புவது ஏன்..!!


பதில் தெரிந்தால் பின்னூட்டம் இடுங்கள்.. விவாதிப்போம்..


அச்சமுண்டு அச்சமுண்டு...

தோல்வி பற்றி மட்டும் அல்ல.. தோல்வி நேரும் என்ற நினைப்பு கூட சிலருக்கு பயமாகவும் கசப்பாகவும் உள்ளது. பள்ளி கூடங்களில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வெழுத அனுமதிப்பதில் இருக்கும் அரசியல் இதனை உறுதிப்படுத்துகிறது. பொது தேர்வில் பங்கெடுத்தால் நிச்சயம் தேற மாட்டார்கள் என்றிருக்கும் மாணவர்களை தனிப்படுத்தி அவர்களுக்கு தேர்வெழுதகூட அனுமதி அளிப்பதில்லை சில பள்ளிகூடங்கள். அடிப்படை வாய்ப்பு கூட மறுக்கபடுகிறது. இவர்களை எல்லாம் தனிமைபடுத்தி - பின்னர் இரண்டு மாதங்களில் வரும் மறு தேர்வில் தனியார் மாணவர்களாக நிறுத்தி விடுகிறார்கள். பள்ளிகள் 100% தேர்வு வேண்டும் என்ற எண்ணத்தில் செய்யும் இந்த வியாபாரத்தை - நீதிமன்றம் தலையிட்டு தேர்வுக்கான அனுமதியை அளிக்க கட்டளையிட்டிருக்கிறது. கல்வி, மருத்துவம், அரசியல் எல்லாம் வியாபாரமாகிவரும் வரும்காலம் - அடிப்படை உரிமைகள் மறுக்கபடும் சமுதாயத்தையும், தோல்வி பயம் காணும் மன பலமில்லாதவர்களையும் மட்டுமே உருவாக்க போகிறது.

அரசியல் குரங்குகள்...

ஒரு அரசியல்(!!!)/ஜாதி கட்சி - மறுபடியும் ஒரு கூட்டணி மாற்றம் செய்திருக்கின்றது. தேர்தல் காலங்களில் இப்படி பட்ட கேவலமான கூத்துகள் சகஜமாகிவிட்ட நம் தேசத்தில் ஒவ்வொரு தேர்தலுக்கும் அணி தாண்டும் கட்சிகள் மலிந்து விட்டது கண்கூடு. 1988ம் வருட ஆனந்த விகடனின் தலையங்கத்தில் இந்த கூட்டணி மாறுதலை பற்றி ஒரு கண்டனம் இருக்கிறது. இது வருடம் 2009 - இன்னும் நிலை மாறவில்லை - மோசம்தான் ஆகியிருக்கிறது. சமீபத்தில் கூட்டணி மாறிய கட்சி சொல்லியிருக்கும் காரணத்தை படித்து பாருங்கள் - அதில் அவர்களது "கொள்கை" அற்புதமானதாக இருக்கிறது. இங்கு இருக்கும் போது அங்கு உள்ளவர்களை கேவலமாக பேசுவது - அங்கு இருக்கும் போது இங்கு இருப்பவர்களை கேவலப்படுத்துவது - இத்தனை சூடு சொரணை உள்ளவர்கள் "அண்ணனும்" இல்லாமல் "அன்பு தோழியும்" இல்லாமல் தனியாக தேர்தலில் நிற்கலாமே..!! அட அப்படி எல்லாம் இருந்துவிட்டால் சம்பாரிப்பது எப்படி...!! இந்த குரங்கு கூத்துக்கு ஈழத்தமிழர் நலன் காப்பு என்ற சால்ஜாபு வேறு..!! எல்லாம் நேர கொடுமை.. மூன்றாவது மாற்றாக - ஒரு ஆச்சரியமாகவும்தான் - நடிகர் கட்சி தனியாக நிற்க்கிறது - சின்னம் கூட கொடுத்து விட்டார்கள். நமது அய்யா இந்த நடிகரை கொள்கை இல்லாத கட்சி என்று விமர்ச்சித்து இருந்தால் ஒரு காலத்தில். கொள்கை கொண்ட அய்யாவின் கட்சி ஒவ்வொரு தேர்தலுக்கும் கொள்கை காகிதங்களில் பிரியாணி துடைத்துவிட்டு கூட்டணி மாறி கொண்டுதான் இருக்கிறது. நடிகருக்கு கூட்டணி சேராமல் இருக்க என்ன காரணம் என்ற கேள்வி இருந்து கொண்டிருந்தாலும் - இந்த நிமிடம் அவர்மேல் - (கொஞ்சம் சினிமாதனமாக இருந்தாலும்) - ஒரு மதிப்பு இருப்பது உண்மை...

Wednesday, March 25, 2009

நாலு மூலை...

அய்யா ரா.கி.ரங்கராஜன் என் புத்தக உலகுக்கு முதன் முதலில் அறிமுகமானது நக்கீரன் பதிப்பகத்தார் வெளியிட்ட 'நீங்களும் முதல்வராகலாம்' புத்தகத்தின் மூலம். மொழிபெயர்ப்பு கட்டுரைகளாக நக்கீரனில் வெளிவந்து இருந்தாலும் புத்தகமாக படிக்கும்போது மிகவும் பயனுள்ளது - அதுவும் என் தொழிலுக்கு எல்லாம் ரொம்ப... நிறைய அலுவலக குழு விவாதங்களில் இந்த புத்தகத்தில் சொல்லபட்ட கருத்துகளை உபயோகபடுத்தி இருக்கிறேன்... 'நான் கிருஷ்ணதேவராயன்' என்ற புத்தகம் - தன் முதன்மைப்படுத்தபட்ட கதாபாத்திர அமைப்பில் கதை சொல்லும் பாங்கில் அமைந்த அற்புதமான சரித்திர புதினம்.. மற்றபடி இவர் எழுதிய புத்தகங்களை அதிகம் படித்ததில்லை - கிடைக்கவில்லை என்பதும் உண்மை. சில நேரங்களில் ரா.கி.ராவையும் கி.ராவை குழப்பி கொண்ட கூத்தெல்லாம் நடந்ததுண்டு.. அய்யா நிறைய எழுதியிருக்கிறார் என்பதை சமீபகாலமாகதான் கண்டு கொண்டேன் - புத்தகங்களை திரட்டும் வேலை நடந்து கொண்டிருக்கிறது. குமுதத்தில் இவருடைய நிறைய பங்களிப்பு இருக்கிறது..சினிமா பதிவுகள், கிரைம், திகில் கதைகள், மற்றும் நகைச்சுவை கலந்த சமூக விமர்ச்சனங்கள் என இவர் தளம் மிகவும் விரிந்தது. கமல், கிரேஸி, எஸ்.வி.சேகர் ஆகியோருகெல்லாம் குரு - நம் சுஜாதா செல்லமாக எழுத்து 'ராட்சன்' என்று சொல்வாராம்.. மகாநதி மற்றும் பல படங்களை உருவாக்க ரா.கியின் நட்பு பெரிதும் உதவியிருப்பதாக கமல் சொல்லியிருக்கிறார். 'அவன்' என்ற பெயரில் சுய சரிதையும் எழுதியிருக்கிறார். இந்த பதிவு - மாம்பலம் டைம்ஸ் என்ற சென்னையில் வெளிவரும் இலவச ஏரியா பத்திரிக்கையில் இவர் எழுதிவரும் 'நாலு மூலை' என்ற பத்தி பற்றி... (அண்ணாநகர் டைம்ஸிலும் வருகிறது போலும்..!!!), மிக இயல்பான நடையில், மெல்லிய நகைச்சுவையோடு, சுவை குன்றாமல், நடைமுறை வாழ்க்கையின் சம்பவங்களை நாம் எல்லாரும் பார்க்கும் பார்வையிலேயே பார்த்து - பகிர்ந்து கொள்கிறார். மிகவும் நேர்மையான ஒப்புக்கொள்ளும் பாங்கும், சுயமாக கேலி செய்து கொள்ளும் கதாபாத்திர அமைப்பும் ரசிக்கும் வகையில் ரொம்ப உசத்தி - 80 வயதுக்கு மேல் இருக்கும் அவர் எழுத்தில் தெரியும் குறும்பும் வேகமும் படித்தால்தான் ரசிக்க முடியும்... 'நாலு மூலை' தொகுப்பாக 'கிழக்கு பதிப்பகம்' வெளியிட்டு இருக்கிறது என கேள்வி - வாங்க வேண்டும்... படிக்க வேண்டிய தொகுப்பு...

பகடியும் பாலியலும்...

பகடி கவிதைகள்/பாடல்கள் பற்றி ஜெயமோகன் சென்ற வாரம் எழுதியிருந்தார். படிக்கும் போது இத்தகைய பகடி பாடல்கள், கவிதைகள் மற்றும் கதைகளை எங்கள் ஊரிலும், சில பள்ளிகாலங்களிலும் கடந்து வந்தது நினைவு வந்தது. பொதுவாக இவற்றை கெட்ட வார்த்தை விஷயம் என்று வகைப்படுத்திவிடும் அளவுக்கு அதில் பாலியல் கலந்திருக்கும். மற்றபடி வார்த்தைகளை மாற்றி போட்டு ஒருவரை ஏற்றிவிட்டும் பாடுவார்கள் அல்லது கேவலமாக இறக்கி விட்டும் பாடுவார்கள். சில தெரிந்த கதைகளை எடுத்து அதில் கலாட்டா செய்யபடுபவரின் கதாபாத்திரத்தை சேர்த்து சிரிக்க சிரிக்க கதை சொல்வார்கள். உதா: அர்ஜீனன் காதல் கதையில் ஒரு சலவை தொழிலாளி. பாலியல் இல்லாத கதை பாடல்களும் உண்டு என்றாலும் பாலியல் சார்ந்த விஷயங்களுக்கு அதிக எதிர்பார்ப்பும் ஆரவாரமும் இருக்கும். இது கரகாட்டம் ஆடும் கூத்து முதல், ஞாயிற்று கிழமை மதிய வேப்ப மரத்தடி ஜமா வரை ஒன்றுதான். பிரபல பாடல்களில் ஆபாச பகடிகள்தான் எல்லாரையும் கவரும் விஷயம்...இது இப்போதெல்லாம் சில இணையவழி காம தளங்களில் சல்லீசாக கிடைக்கிறது...நமுட்டு சிரிப்புடன் ரசித்து கொள்ளலாம்.. ஆபாச பகடி பாடல்கள் புனைவதையும், புனைந்த பிரபலங்கள் பற்றியும் ஜெயமோகன் எழுதியுள்ளதை படிக்கும்போது கொஞ்சம் அந்த விஷயங்களை தேடி பிடிக்க வேண்டும் போல இருக்கிறது - பார்க்கலாம் யாராவது வைத்திருப்பார்கள். ஜெயமோகன் சொல்வதை போல பகடி - கருத்தியல் அதிகாரத்துக்கு எதிரான ஒரு சமூகத்தின் எதிர்வினை என கொள்ளலாம். புனிதம், உன்னதம் எனப்படும் விஷயங்கள் கேலிக்குறியதாகி ஒருவகையான பகுத்தறிவு சிந்தனை வலுபெற்று - அதன் வழியே பகடி வலிமையாகிறது. பள்ளி கூட காலத்தில் ராமாயண - மகாபாரத கதைகளையும், கதை மாந்தர்களையும் ஆபாச பகடி பாடல்களில் கேட்டு அதிர்ச்சியாகியிருந்தாலும் - பின்னர், அந்த பாடல்களில் சாத்தியங்களை யோசிக்கவும் வைத்திருக்கிறது. எல்லா கொள்கைகளையும், அடிப்படை மத சமூக நம்பிக்கைகளையும் அதிகாரங்களையும் பகடி கவிழ்த்து விடுகிறது. சில வெகுஜன மற்றும் பல சிறுபத்திரிக்கைகள் அரசியல் சமூக நிஜங்களை பகடியாக்குவது ஒரு நல்ல விமர்ச்சன ரீதியான முன்னேற்றம். வலிமையான எதிர்வினை, தலித் வாழ்க்கை மற்றும் மாற்று சிந்தனை போல, பகடி வழி பாலியலும் இருந்தாலும் - பாலியல் விஷயங்கள் மட்டுமே பகடி என்பது போல தோற்றம் பெற்று விட்டதை மாற்ற முயற்சிக்கலாம்.இதனை பற்றி தெளிவான விஷயங்களும், மேலும் படைப்புகளும் வந்தால் மட்டும் அது சாத்தியம்..

திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை...

இரண்டு நாட்கள் வார இறுதி சுற்றுலா - இனிதே கழிந்தது. அனுவின் பிறந்த நாள் 21 மார்ச் - அந்த நாளில் வெகுநாள் கனவான கங்கை கொண்ட சோழபுரம் செல்ல வேண்டும் என்று அவள் விருப்பம் தெரிவிக்க - உடனடியாக உருவானது இந்த திட்டம். கிட்டதட்ட ஒரு மாதம் முன்பே பயண திட்டத்தில் உள்வரும் கோவில்கள் மற்றும் இடங்கள் பற்றி திட்டம் இருந்ததால் இணையத்தில் படித்து கொஞ்சம் தெரிந்து கொள்ள முடிந்தது - எனினும், சென்று வந்த இடங்கள் மிக நிறைய விஷயங்களை சேகரிக்க உதவியிருக்கின்றன. ரேவதியும் நானும் ரயிலில் திருச்சி சென்று விட்டோம். வெள்ளி இரவு ரயில் 3 மணி நேரம் தாமதம் - அது அவுராவில் இருந்து வரும் ரயில் - எனவே தாமதம் புது விஷயமில்லை. 3 மணி நேரம் எழும்பூர் ரயில் நிலையத்திலேயே கழிந்தது. சும்மா கொஞ்சம் நேரம் நடந்து, தேநீர் அருந்தி, கதை பேசியே நேரம் தள்ளினோம். ரயில் 11 மணிக்கு கிளம்பி திருச்சியை சனி காலை 6 மணிக்கு அடைந்தது. ஒரு காப்பி குடித்து விட்டு (பில்டர் காப்பி பற்றிய சிலாகிப்போடு) நடந்து மதுரா என்ற விடுதியில் தங்கினோம். பேருந்து நிலையத்துக்கு எதிரே இருப்பதால் சாப்பாடு, போக்குவரத்து பிரச்சனை கிடையாது. அனுவும், சுரேஷும் வந்து எங்கள் அறைக்கு வந்த போது - நாங்களும் கிளம்பியிருக்க - முன்பே செய்திருந்த ஏற்பாட்டின்படி கார் காத்திருந்தது. முதலில் தஞ்சை பெரிய கோவில், பின்னர் கங்கை கொண்ட சோழபுரம் - திரும்பி திருச்சி வரும் வழியில் திருவையாறு. அடுத்த நாள் அதிகாலை கிளம்பி திருச்சியில் உள்ள ஒரு அய்யப்பன் கோவில், வயலூர், வெக்காளியம்மன் கோவில், உறையூரில் பஞ்சவர்ணேஷ்வரர் ஆலயம், பிரம்மா கோவில், உத்தமர்கோவில்,திருவாசி அப்புறம் குணசீலம். பின்னர் மதியம் புதுக்கோட்டையில் குடிமியான்மலை மற்றும் சித்தன்னவாசல். அன்று இரவு மறுபடி சென்னை பயணம்... ஒவ்வொரு கோவில் பற்றியும், பார்த்த விஷயங்கள் பற்றியும் பின்னர் பதிவுகளில் பகிர்ந்து கொள்கிறேன். நிறைய புகைப்படங்கள் எடுத்தோம் - இந்த முறை என் புகைப்பட அறிவு கொஞ்சம் தெளிவாக இருந்தது போல இருக்கிறது. சில படங்கள் லேப்டாபில் பார்க்கும்போதும் நன்றாகவே இருக்கிறது. வழியெங்கும் நன்னாரி சர்பத், பன்னீர் சோடா, தண்ணீர் பாட்டில்கள் என உள்வாங்கும் அளவுக்கு வெயில் கொளுத்தினாலும் பயணம் மிக அருமை. எங்களுக்கு வாய்த்த ஓட்டுனர் (சிவா) மிகவும் ஒத்துழைத்தார் - எங்கள் கூத்துகளையும் தாண்டி. நிறைய பேசவும் பகிர்ந்து கொள்ளவும் ஒரு வார இறுதியை உருப்படியாக கழிக்கவும் இந்த பயணம் நிறைய உதவியது. பயணம் சார்ந்த மற்ற நினைவுகளை பற்றி ஒரு 10 பதிவாவது எழுதலாம்.. :-)

வங்காள திரைப்படங்கள்...

உலக அழகியாக தேர்ந்தெடுக்கபட்ட ஐஸ்வர்யா ராய் வழக்கம் போலவே இந்திய திரையுலகின் குப்பை திரைப்படங்களில் நாயகியாக இருந்தார் - இருந்து கொண்டிருக்கிறார் - எனினும் வெகு சில திரைப்படங்கள் நடிப்பையும் பெயர் சொல்லும் விதமாக வெளிப்படுத்த உதவியிருக்கின்றன.. அவை பெரும்பாலும் வங்காள திரைப்படங்களாகவே இருக்கின்றன... இந்த இரண்டு திரைப்படங்கள் பற்றி அதிக அறிமுகம் தேவையில்லை எனினும் - ஒரு சிறு குறிப்பாகவே சொல்கிறேன். 1. ரெயின்கோட் - ரிதுபர்ன கோஷ் இயக்கத்தில் அற்புதமான திரைப்படம். ஐஸ்வர்யாவும் அஜய் தேவ்கனும் நடித்திருப்பார்கள். 'ஒ கென்றியின்' சிறுகதையை கருவாக கொண்ட திரைக்கதை. பாடல்கள் எல்லாம் பிண்ணனியில் மட்டும்தான். அருமையான மெல்லிய இசை. பொய் என்னும் முகமூடி அணிந்த - அதற்க்கான காரணத்தை கவிதை போல கொண்ட முன்னால் காதல் ஜோடி... அவர்கள் மறுபடியும் சந்திக்கும் மழை நாள்... ஒருவருக்கு ஒருவர் சொல்லி கொள்ளும் பொய்கள்.. இறுதியில் வெளிப்படும் உண்மையும் - அது கொடுக்கும் உறுத்தலும்.. வாழ்வில் இது போன்ற நிமிடங்களை நாமும் தாண்டி வந்திருப்போமா..!! திரைப்படத்தை பார்த்து உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்.. 2. சோக்கர் பாலி - ரவீந்திரநாத் தாகூரின் கதையை மையமாக கொண்ட வலி சொல்லும் கவிதை... இதன் இசை மிகவும் குறிப்பிட தக்கது.. மிஸ்ரா அவர்களின் உழைப்பு தெரியும் அதில். இதிலும் பாடல்கள் பிண்ணனியில் மட்டும்தான். விதவைகளின் வாழ்வு பற்றிய இந்த திரைப்படம் சுதந்திர போராட்டத்தின் பிண்ணனியில் சொல்லபட்டு இருக்கும். கதைகள் எல்லாம் நீங்கள் விக்கிபீடியாவில் கூட படித்து கொள்ளலாம் - எனினும் அனுபவித்து ரசிக்க வேண்டுமெனில் திரைப்படத்தை பாருங்கள்.. (நம்மூரில் ஐஸ்வர்யா ராயின் இன்ப இரவுகள் என்று டப் செய்து கேவலப்படுத்தினார்கள்.. டிவிடியில் பார்த்தல் நலம் ) - ரிதுபர்ன கோஷின் நிறைய திரைப்படங்கள் மிக அழகாகவும், கருத்தோடும் இருப்பதாக கருதுகிறேன்... பெரும்பாலும் முந்தைய தலைமுறை சார்ந்த கதைகள்.. லாஸ்ட் லியர் - அமிதாப்பின் அற்புத அவதாரமாக இருந்தது. வாய்ப்பு இருந்தால் இந்த 45 வயது மனிதரின் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படங்களை கவனித்து பாருங்கள்... திரைப்பட உக்தி, இயக்கம் அமைந்த முறை, இசை, காட்சி அமைப்பு, கதாபாத்திர வடிவமைப்பு மற்றும் கதை சொல்லும் பாணி - கதையின் நேர்மை என நிறைய இருக்கின்றன..

நாவினால் சுடும்...

சென்ற வார இந்தியன் எக்ஸ்பிரஸ் என்று நினைக்கிறேன் - பட்டிணத்து குடும்பங்களின் சமீபகால கவலையாக ஒரு பிரச்சனையை பற்றி எழுதியிருந்தது. அது குழந்தைகள் "கெட்ட வார்த்தை" பேசுவது.. கெட்டவார்த்தை என்று ஒன்று மட்டும் இல்லாமல் இருந்தால் மனிதர்கள் வன்முறையில் உலகத்தை அழித்திருப்பார்கள் என்று எங்கொ படித்ததுண்டு.. அது உணர்வு ரீதியான கோபத்தை காண்பிக்கும் முறை. ஆனால் இன்றைய குழந்தைகள் பல வார்த்தைகளை அர்த்தம் புரியாமல் பேசுவதை கவனிக்கின்றோம். சிலருக்கு தெளிவான அர்த்தம் புரிகிறது என்றாலும் அது ஏற்படுத்தும் அதிர்ச்சி அலைக்காக வேண்டும் என்றே பேசுகிறார்கள். பல கெட்ட வார்த்தைகள் டிரைவர், வாட்ச்மேன், பக்கத்து வீட்டு ஆட்கள், தெருவில் போகும் மனிதர்கள், சக குழந்தைகள் - மற்றும் (சில நேரங்களில்) பெற்றோரிடமிருந்தும் கற்று கொள்கிறார்கள். இன்றெல்லாம் ஆங்கில கெட்ட வார்த்தைகள் சகஜமாகிவிட்டன (உபயம்: பெற்றோர், டிவி, டிவிடி திரைப்படங்கள்)..தமிழ் கெட்ட வார்த்தைகள் உபயம் தமிழ் சினிமா, வடிவேலு, விவேக் மற்றும் சில சின்னதிரை நிகழ்ச்சிகள். வன்முறை உணர்வை அடக்கி, அதனை வார்த்தைகளில் வெளிப்படுத்தும் கெட்டவார்த்தைகள் இன்று சில நேரம் பேஷன் வார்த்தைகளாக உபயோகபடுத்தபடுகின்றன... மொழிவாரியாக கெட்ட வார்த்தைகளை ஒரு சிறுபத்திரிக்கை - பெயர் சரியாக நினைவில்லை - தேடி அதன் பின்புலத்தை ஆராய்ந்து இருந்தது.. பெரும்பாலானவை உறவு சார்ந்த கொச்சை அர்த்தங்களை கொண்டவை.. சாதாரண மட்டத்தில் இருக்கும் மனிதர்களை விட, படித்த நல்ல நிலையில் இருக்கும் மனிதர்கள் பேசும் வார்த்தைகள் கேட்க சகிக்காது - என்ன அது ஆங்கிலத்தில் இருக்கும். சொல்ல போனால் இது ஒருவகையான மன பிழற்சி - எனினும் ஒரு வடிகாலும் கூட. நான் சில முறை சென்னை குழாயடி சண்டைகளை கவனித்து இருக்கிறேன் - தினமும் நடந்தாலும் - ஒரு போர்னோ திரைப்படம் பார்க்கும் உணர்வை அந்த சண்டையில் சொல்லப்படும் வார்த்தைகள் தந்து விடும்...ஆனால் அதுக்கப்புறம் எல்லாம் மறந்து ஈஷிக்கொள்வார்கள்.. முன்பெல்லாம் ஒரு சின்ன திட்டு திட்டினாலே இரண்டு நாள் பேசாமல் இருக்கும் காலம் - இப்போதெல்லாம் என்ன வார்த்தை சொல்லி திட்டினாலும் - கண்டு கொள்ளாமல் போய் கொண்டு இருக்கிறார்கள் - அவ்வளவு சகிப்பு தன்மை என்று கொள்ள கூடாது - அவ்வளவு சகஜமாகிவிட்டது. சில பெற்றோர் சொல்வது என்னவென்றால் - ஆங்கிலத்தில் என்ன சொன்னாலும் பரவாயில்லை - தமிழில் கெட்டவார்த்தை பேசாமலிருந்தால் சரி... !!! என்ன கொடுமை சார் இது..!!!

Wednesday, March 18, 2009

100வது நாள்..!!!

அடடே.. இன்னிக்கு 100வது நாள். எனக்கும் ரேவதிக்கும் கல்யாணமாகி 100 நாள் ஆகிடிச்சு.. காலையில் அப்பாவை கூப்பிட்டு சொன்னதும் சிரித்தார். "இது என்ன சினிமாவா... நாடகமா.. - சரி சரி.. சந்தோஷமா இரு.." - "எங்கள் ஆசீர்வாதம் என்னிக்கும் உண்டு.. முடிஞ்சா ஏதாவது கோவில் போய்ட்டு வாங்க" - இது அம்மா.. நண்பர்கள் எஸ்.எம்.எஸில் வாழ்த்துகளும் கிண்டலும். அனு நேற்று இரவே கலாட்டா செய்து வாழ்த்தி விட்டாள்.. மாமனார் சிரித்து கொண்டே வாழ்த்தினார்..!!! டிசம்பர் 8 2008ல் இருந்து கணக்கு போட்டால் இன்று 100வது நாள். மே 25 2008 (அன்று தான் பெண் பார்த்த நாள்) கணக்கு போட்டால் 293 நாட்கள் வருகிறது.. இவ்வளவு நாட்களில் சில சின்ன சின்ன கருத்து வேறுபாடுகளை தவிர மற்றபடி சந்தோஷ ஜீவனம்தான். பெண் பார்க்க போனது, இடைக்கால தொடர்ப்புகள், திருமணம், தேனிலவு, வார இறுதி ஊர் சுற்றுதல்கள், சேர்ந்து செய்யும் சமையல், புத்தகங்கள், உலக திரைப்படங்கள், நல்ல இசை என நிறைய சம்பவங்களும் சந்தோஷங்களும்... இன்று மாலையும் மதியமும் வெளியேதான் உணவு... ரேவதி வாழ்த்து அட்டையும் ஒரு கண்ணாடி பரிசும் கொடுத்தாள் - அழகானது - எங்கள் உறவு போலவே... நிறைய கதைகள் இருக்கின்றன.. வாழ்த்திய - வாழ்த்த நினைத்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றி.

குற்றமும் எழுத்தும்...

காலை 'கலைஞர்' தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் எழுத்தாளர்கள் சுபா பேசி கொண்டிருந்தார்கள். நான் ஆறாம் வகுப்பு படிக்கும் போது ராஜேஷ்குமார் நாவல் புத்தகங்கள் அறிமுகமானது. பாக்கெட் சைஸ் நாவல்கள் 8ஆம் வகுப்பு காலத்தில் என நினைவு. காமிக்ஸ் புத்தகங்களுக்கு இணையாக நாவல்களும் படித்து கொண்டிருப்பதுண்டு. பெறும்பாலும் கிரைம் நாவல்கள்தான். விவேக்கின் புத்திசாலித்தனத்தின் மேல் அதீத பிரேமை கொண்ட காலங்கள்.. கோகுல்நாத் விவேக் பங்கு பெறும் நாவல்கள் நிறைய வைத்திருந்தேன். கதை சொல்லும் அமைப்பே அந்த வெற்றிக்கு காரணம் என்று சொல்லலாம். சுருக்கமான வசனங்கள், சம்பவ கோர்வைகள் மற்றும் காட்சி அமைப்புகள் - ராஜேஷ்குமார் கலக்கி கொண்டிருந்தார். அப்புறம் சுபா. நரேனும் வைஜயந்தியும் ராம்தாஸும் அனிதாவும் ஜான் சுந்தரும் - ஈகில்ஸ் ஐ என்ற துப்பறியும் நிறுவனம் - கொஞ்சம் இளமை புதுமை கொண்டது. ஒரு இன்ஸ்பெக்டரும் அவர் மனைவியும் கூட கூட்டணி கதாபாத்திரங்கள் என நினைவு. சுபாவின் மற்றொரு சுவரஸ்யமான கதாநாயகன் செல்வா - என்ற செல்வராஜ் - அவரின் அஸிட்டென்ட் முருகேசன். மெல்லிசான நகைச்சுவையும் - எப்போது பிரச்சனையில் நேரடியாக சிக்கி கொள்ளும் பாங்கும் கொண்ட இந்த கதாபாத்திரத்தின் கதைகள் என்னிடம் இன்னும் கொஞ்சம் இருக்கின்றன. பரத் - சுசீலா, பட்டுகோட்டை பிரபாகரின் கதாநாயகர்கள். புத்திசாலிதனமும் காதலும் கொஞ்சும் ஜோடி. ஒரு முறை சுபாவும், பி.கே.பியும் சேர்ந்து ஒரு நாவல் எழுதினார்கள் - 4 கதாநாயகர்களும் கலக்கிய நாவல் அது. பல புத்தகங்களை சென்னை பாரிஸ்கார்னரிலும், கோவை பழைய புத்தக மார்கட்டிலுமே சேகரித்திருந்தாலும் இன்னும் வைத்திருக்கிறேன். இவர்கள் தவிர வேறு எந்த துப்பறியும் நாவலும் அதிகம் படித்ததில்லை. சுஜாதாவின் கணேஷ்-வசந்த் - இவர்களை துப்பறிவாளர்கள் என்று தனிமைபடுத்த முடியாத அளவு பன்முக அமைப்பு கொண்ட கதையம்சங்கள் இருக்கும். சகஜமான - புத்திசாலிதனம் மிக்க - லேட்டரல் திங்கிங் கொண்ட கணேஷ் - சபலங்களில் இருக்கும் - அதீத குறிப்பு நினைவாற்றலும் இளமையும் கொண்ட வசந்தும் சுஜாதாவின் அடிப்படை இரண்டு முகங்களே. சட்ட குறிப்புகள், வரலாறு, சிந்தனைவாதம், கிரைம், மெல்லிய நகைச்சுவை, வெளிப்படுதலில் முகசுளிப்புகாட்டாத செக்ஸ் என இவர்களின் தளம் முற்றிலும் வேறு. கடைசியாக படித்தது ஜெயமோகன் எழுதிய 'நான்காவது கொலை' திண்ணை இணைய தளத்தில் படித்தது. பின்நவீனதுவம் வடிவு கொண்ட பெரும் சிறுகதை வகை இது. 10 பாகங்கள் என நினைவு. கிட்டதட்ட எல்லா துப்பறிவாளர்களும் இருப்பார்கள் - ஷெர்லக் கொம்ஸ், ஜேம்ஸ்பாண்ட், கணேஷ் வசந்த், திகம்பர சாமியார், சங்கர்லால், துப்பறியும் சாம்பு என.... - படிப்பது ஒரு ஜாலியான அனுபவம். இது இலக்கியமா - சமூக சமுதாய விழிப்புணர்வு அல்லது ஏதேனும் நன்மையுண்டா என்ற கேள்விகளைதாண்டி ஏதேனும் ஒரு வகையில் புத்தகங்களை படிக்க வைக்கிறது.

Tuesday, March 17, 2009

கபி கபி...

என் மொபைல் போனின் காலர் டியூன் ("கைபேசியின் அழைப்பாளர் கேட்கும் இசை") 1976ல் வந்த ஒரு இந்தி திரைப்பட பாடல். "ஏன் இந்தி" என தார் டின் கையில் எடுப்பார் எவரும் இருக்கமாட்டார்கள் என நம்புகிறேன். அந்த பாடல் முகேஷ் சந் மாத்தூர் என்ற அற்புதமான பாடகரின் பாடல் - "கபி கபி" திரைப்படத்தில் இருந்து. இன்றைய இந்தி பாடல்கள் போல அதிரடி இசை இல்லாத காலம் அது. முகேஷ், முகமது ரபி, கிஷோர்குமார் என அருமையான பாடகர்கள் இருந்த காலம் அது. இன்றும் அந்த பாடல்கள் முன்னிரவு நேர அமைதியில் கேட்க சுகமானவை. சோகமானாலும், சந்தோஷமானாலும் - இந்தியும் உருதும் கலந்த அந்த பாடல்கள் அர்த்தம் கொண்டவையாக இருந்தன. அதே நேரத்தில் தமிழிலும் அதே வகையான பாடல்கள் இருந்ததை ரேவதியின் அப்பா சொல்லி கொண்டிருந்தார். அனுவும் நானும் விடிய விடிய பேசி கொண்டிருந்த சென்ற வருட கோடையில் எல்லாம் இந்த பாடல்கள்தான் என்னுடன் விழித்திருக்கும். ஒளி தகடுகள் கிடைக்கிறது இன்றும் எனினும் பெரும்பாலான பாடல்கள் பல்வேறு தகடுகள் சிதறி இருப்பதால் இணையத்தில் இருந்து பகிர்ந்து கொள்வதே இலகுவாக இருக்கிறது. நல்ல இசை ரசிக்க மொழி அவசியம் இல்லை என்பது என் கருத்து. லாலாவிலோ, அல்லது தன்னன்னன்னாவிலோ எந்த பாடலையும் அதன் ரிதத்தையும் அனுபவித்து ரசிக்க முடியும். வாத்தியங்களை பற்றி கொஞ்சம் அறிந்திருந்தால் இசை ரசித்தல் கூடுதல் இனிமை. மொழி புரிந்து ரசித்தால் - ஆகா தேவ சுகம். என் பள்ளி நாட்களில் அப்பாவும் நானும் விவிதபாரதியில் கேட்டு கொண்டிருப்போம். டிவி கிடையாது. ரேடியோதான் உலகம். மறக்க முடியாத காலம் அது. வாய்ப்பும் விருப்பமும் இருந்தால் தமிழ் பாடல்கள் ரசிப்பது போலவே பழைய இந்தி பாடல்களையும் கேட்டு பாருங்கள். சமீபத்திய சந்தோஷம். என் அலுவலக நண்பர் ஒருவரும் அவருடைய மொபைல் போனின் காலர் டியூனாக பழைய முகேஷ் இந்தி பாடலை வைத்திருக்கிறார் - இது என் மொலைப்போன் காலர் டியூனால் வந்த மாற்றம். :-)

ஆரோக்கியமான நகைச்சுவை.

சென்ற வார இறுதியில் ஒரு நாள் பாண்டி பஜாரில் உள்ள "Music World" சென்றிருந்தோம். கொஞ்சம் பழைய தமிழ் படங்கள் "Moserbaer" ல் வாங்கலாம் என நினைத்திருந்தோம். கிடைத்தது சில படங்கள்தான். "Moserbaer" இணையதளத்தில் உள்ள அளவுக்கு கடைகளில் கிடைப்பதில்லை போலும். ரேவதியின் தந்தையும் பழைய படங்கள் விரும்பி பார்ப்பார் - எனவே அவருக்கு இரண்டு வாங்கவிருந்தோம். பார்க்க பார்க்க - கிட்டதட்ட எல்லா படங்களிலும் நாகேஷ் ஒரு தவிர்க்க முடியாத கதாபாத்திரமாகவே இருந்ததை கவனித்தோம். இது புதிய விஷயம் இல்லை எனினும் - இது பற்றி பேசுவதை எனக்கு ரேவதிக்கும் தவிர்க்க முடியவில்லை. பல படங்களை நினைவுருத்தி கொண்டோம். சர்வர் சுந்தரம், எதிர்நீச்சல் என ஒரு கதாநாயகனுக்கு சமமான திரைப்படங்கள் இருந்தாலும் திருவிளையாடல், ஊட்டி வரை உறவு போன்ற திரைப்படங்களும் மறக்க முடியாது. காதலிக்க நேரமில்லை திரைப்படத்தில் அவர் மேஜையில் குரு ஜெர்ரி லூயிஸின் புகைபடத்தை வைத்திருப்பார். ஜெர்ரி லூயிஸ் திரைப்படங்களை பார்த்தவர்களுக்கு நாகேஷ் ஏன் அவரை குருவாக கொண்டார் என புரிந்து கொள்ளலாம்.

நம்மவர் மிக அருமையான ஒரு குணசித்திர வேடத்தை தந்தது. மகளிர் மட்டும் திரைப்படத்தில் ஒரு பிணம் - ஆனால் மிகவும் சிரிக்க வைத்த ஒரு பிணம். ஒரு காலத்தில் திலக நடிகர்கள் கூட தங்கள் படங்களுக்கு நாகேஷின் தேவை மிக அதிகம் என உணர்ந்திருந்தார்கள். ஒரு கட்டத்தில் கமல் மட்டுமே நாகோஷை சரியான முறையில் உபயோகபடுத்தி கொண்டார். சில ரஜினி படங்களும் உண்டு. சில திரைப்படங்களில் கொடூரமான ஆனால் கொஞ்சம் சிரிக்க வைக்கும் வில்லன் வேடங்களும் உண்டு. வேகமான - மற்றும் எதிர்வினை சார்ந்த நடிப்பும் வசன துள்ளலும் அவர் அடையாளங்கள். அது சார்லி சாப்ளின் மற்றும் ஜெர்ரி லூயிஸின் நடிப்பினை ஆழ்ந்து வாங்கி கொண்ட கவனங்கள். அன்பே வா, பாமா விஜயம், அவ்வை சண்முகி, பஞ்சதந்திரம் என வித்தியாசங்களை காண்பித்து இருந்தாலும் எம்.ஜி.ஆர் சிவாஜி தாண்டி ஒரு இயக்குனரின் பார்வைக்கு உயிர் கொடுத்தவர் நாகேஷ். அது அவருக்கும் கே.பாலச்சந்தருக்கும் உள்ள இணக்கம். நடிகர்கள் ஜெமினிக்கும் தங்கவேலுவுக்கு ஒரு புரிதல் சார்ந்த நட்பு இருக்கும் - உதாரணம்: கல்யாண பரிசு. அத்தகைய புரிதல் எம்.ஜி.ஆருடனும், சிவாஜியுடனும் நாகேஷுக்கு இருந்தது. பல படங்கள் உதாரணமாக சொல்லலாம். அவர் மறைவுக்கு அஞ்சலி செலுத்த வந்த வைரமுத்து - தமிழகத்தின் சிரிப்பு இறந்து விட்டது என சொன்னார். மிகையாகாது. நல்ல நகைச்சுவை, வேகமான எதிர்வினை கொண்ட உடல் அசைவுகள், இரட்டை அர்த்த வசனங்கள் இல்லாத தேர்ந்த குரல் வளம் கொண்ட வசன உச்சரிப்பு, மேலை நாட்டு நாட்டிய வகை (சந்திரபாபு இதனை அற்புதமாக செய்வார்), அருமையான குணசித்திர நடிப்பு என பல்வகை அதிசயங்களை காட்டியவர் நாகேஷ். நிறைய பேசி கொண்டிருந்தோம். கொஞ்சம் படங்கள் வாங்கினோம். இன்னும் என்ன என்ன படங்கள் வாங்க வேண்டும் என பட்டியல் இட்டு கொண்டிருக்கிறோம். பார்க்க வேண்டும். தமிழில் நல்ல நகைச்சுவை இப்போதெல்லாம் காண கிடைக்காததாகி விட்டிடுக்கிறது.

Monday, March 16, 2009

காசேதான் கடவுளடா...

மக்களவை தேர்தலில் ஒரு வேட்பாளர் அதிகபட்சமாக 35 லட்சம் வரைதான் செலவு செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையம் கட்டுப்பாடு விதித்துள்ளது. இது போதாது என கிட்டதட்ட எல்லா வேட்பாளர்களும் புகார் செய்துள்ளார்களாம். செலவுகளை கண்காணிக்க தனி பார்வையாளர்களும், வருமான வரித்துறையினரும் நியமிக்கபட உள்ளார்கள். கடந்த 20004 தேர்தலை விட இம்முறை 50% விலைவாசி உயர்ந்துவிட்டதால் இந்த கட்டுபாடு தளர்த்தபட வேண்டும் என பலரும் கேட்டுள்ளனர். போஸ்டர், வாகனம், கொடி, பிளக்ஸ் போர்ட், தேர்தல் அலுவலக செலவு என கைமீறுமாம் செலவு. உண்மையாக மக்களை சந்திக்கவும், அவர்களுடன் மேம்பாடு குறித்து விவாதிக்கவும், தொகுதிக்கு நிஜமாக நல்லது செய்திருப்பினும் - நல்ல கருத்து சார்ந்த ஒற்றுமை உணர்வு மக்களோடு இருப்பினும் - இந்த பணம் ரொம்பவே அதிகம். பெரும்பாலான இந்த செலவுகள் ஆடம்பர விளம்பரங்களே. கொஞ்சம் ஓட்டுக்கு பணமும் லஞ்ச பொருள்களுமாக விளையாடும். இந்த தேர்தலை வைத்து கட்சிகார அடிமைகள் கொஞ்சம் சம்பாதிப்பார்கள். சாராயமும் கைகலப்பும் இருக்கும். எங்கு கேட்டாலும் காசு இல்லை என்றும் - பொருளாதார தேக்கம் என்றும் சொல்லபடும் தேசத்தில் - இத்தனை பணம் எங்கிருந்து அய்யா வருகிறது. இந்த லட்சணத்தில் காமராஜர் ஆட்சியாம். இதற்கு எல்லா அரிதார முதலைகளும் 2010, 2011 என்று குறிவைத்து காய்நகர்த்துகிறார்கள். மொத்தத்தில் உருப்படியாக சம்பாரிப்பவன் ஏமாளி - மற்றவன் எல்லாம் பிழைக்க தெரிந்தவன்...

மனசு...

இரண்டு நாள் முன்னர் ஜி.என். செட்டி சாலையில் ஒரு இரவு நடை போனபோது வித்தியாசமான ஒரு பேனர். "மனசு" என்று ஒரு அரசு திட்டம். இந்த திட்டம் பொது மக்களுக்கும் தனியார் நிறுவனங்களுக்கும் அரவாணிகளை பற்றி, அவர்களின் திறமைகளை பற்றி சொல்லி அவர்களுக்கு உதவ ஏற்படுத்தபட்டுள்ளது - இதன் மூலம் அவர்களை பற்றிய தவறான நம்பிக்கைகள் களையப்படும். திறமைகள் கொண்ட அரவாணிகளை வேலைக்கு அமர்த்தி கொள்ள ஆர்வம் இருந்தால் இந்த அமைப்பினை தொடர்ப்பு கொள்ளலாம். ஒரு சேவை மையமும் உண்டு. இலவச மருத்துவ சேவை, நேரடி ஆலோசனைகள், பாலியல் வன்முறைகளுக்கு எதிரான சட்ட ஆலோசனை, வேலை வாய்ப்புக்கான மென் - திறன் பயிற்சி ஆகியவையும் வழங்கபடுகின்றன. இதனை மனிதாபமிக்க ஒரு நல்ல முயற்சியாக கருதலாம். இந்த முயற்சியின் பின்னே யார் இருந்தாலும் - இதயம் கனிந்த வாழ்த்துக்கள்.

சென்னை சங்கமம் 2009

ஒரு நல்ல கிராமிய விழாவாகவே நடந்தது இந்த வருட "சென்னை சங்கமம்". நிறைய கூட்டம், நிறைய கலைஞர்கள் - நிறைய "கலைஞர்" துதிகள். ரேவதிக்கு அதிக ஆர்வமில்லை என கொள்ளமுடியாது - அவளுக்கு இது எல்லாம் புதியதாகபடவில்லை. கிராமத்தில் நிறைய இதுபோல பார்த்துள்ளதால் அதிக கவனம் இல்லை. நான் மட்டும் ஓடி ஓடி - அவளையும் இழுத்து கொண்டு ஓடி ஓடி - ஒளிப்படம் எடுத்தேன். இரண்டு நாட்கள் மட்டுமே நிகழ்ச்சிகளை கவனிக்க முடிந்தது - மற்ற நாட்களில் அலுவலக நெருக்கடி. புதிய திண்பண்டங்கள் - பெரும்பாலும் கிராமத்து உணர்வை கொண்ட உணவுகளை விற்க்கும் கையேந்தி வண்டிகளை சுற்றியும், 5 நட்சத்திர 'கரண்டி 50ரூபாய்' உணவுக்குமே கூட்டம் இருந்தது. கமர்கட்டும், தேங்காய் பருப்பியும் வாங்கினோம். அப்புறம் ஜிகர்தண்டா. இஞ்சி மொரப்பா... ஆடும் கலைஞர்களை விடவும், அடிக்கும் தாளத்துக்கு ஆடும் நம் சென்னை இளவட்டங்களை சுற்றி ஒரு கூட்டம் இருந்தது. வெங்கடநாராயணா சாலையை விட பெசன்ட்நகர் கடற்கரை பரவாயில்லை - கொஞ்சம் நாகரீகமாக நடந்து கொண்டார்கள். சில கூத்துகளில் இரட்டை அர்த்தம் - ஆர்பரிக்கும் கூட்டம் பாதி புரிந்தும் பாதி புரியாமலும் கத்தினார்கள். கத்த கத்த இரட்டை அர்த்தம் அதிகமானது. அதிலும் கானா பாட்டு பாடிய அம்மணி குலுக்கிய குலுக்கலில் - கூட்டம் சும்மா அதிருதுல்ல.. உண்மையாகவே அற்புதமான கலைகள் காண கிடைத்தையும் மறுக்க முடியாது. பொள்ளாச்சியில் இருந்து ஒரு தாள குழுவினர், திருவண்ணாமலையில் இருந்து ஒரு கூத்து நாடக குழு, ஒரு பஞ்சாபி நடன குழு மற்றும் பலர் மிகவும் அழகாக செய்தார்கள். கிளி ஜோஸ்யம், குறி கேட்பவர்கள் எல்லாம் இருந்தார்கள். புது மனைவியை கூட்டி போய் கிளி ஜோஸ்யம் பார்க்க போனால் அங்கே சனி விளையாடியது - அவன் ஒரு கூண்டில் இருந்து எலியை வரவைத்தான். அது ஒரு முருகன் படத்தை எடுத்து கொடுத்தது. அவன் கூசாமல் - "உனக்கு ரெண்டு பொண்டாட்டி" என்று சொல்லி விட்டான். ரேவதியும் நானும் சிரித்து விட்டு போடா வெண்ணை என்று காசு கொடுக்காமல் வந்து விட்டோம்.

தெய்வத்தால் ஆகாதெனினும்...

மூன்று வருடத்துக்கு முன்னால் மாதம் கிட்டதட்ட நான்கு லட்சம் சம்பளம். பொறியியல் படிப்பு. டெட்ராய்ட் நகரில் மென்பொருள் வேலை. உங்களில் அடுத்த இலக்கு எதுவாக இருக்கும்... நீங்கள் யோசிக்கும் அதே வினாடியில் செந்தில்குமார் என்ற இந்த நபர் வேலையை விட்டுவிட்டு திருச்சிக்கு வந்தார். கிராமம் கிராமமாக அலைந்தார். தேனூர் என்ற ஊரில் ஒரு சிறிய மருத்துவமனை, ஒரு கணிப்பொறி அமைப்பு, குழந்தைகளுக்காக ஒரு மரத்தடி பாடசாலை - இத்தனையும் கைகாசில். இது வரை நாற்பது லட்சம் செலவாகி இருக்கிறது. மலிவான குழைவான வேஷ்டி - சட்டை, கேரியர் சைக்கிள், சாப்பாட்டு தூக்கு பாத்திரம், மஞ்சம் பையில் லேப்டாப். ஒட்ட வெட்டிய முடி, ஒழுங்குபடுத்தபடாத தாடி மீசை முகம் - இவர் ஒன்றும் பெரிய குடும்ப வாரிசு கிடையாது. சாதாரண குடும்ப பிண்ணனி. "உலக வரலாறு படிப்பதை விட உங்களை சுற்றியுள்ள கிராமங்களை பற்றி தெரிந்து கொள்ளுங்கள். கல்வி கூடத்தை இயந்திரமயமாக்காமல் யதார்த கல்வியை சொல்வோம். இயற்கை வேளாண்மை செய்கிறோம். 3000 மரங்கள் நட்டுள்ளோம். அரசாங்க பள்ளி ஆசிரியர்கள், மருத்துவர்கள், கல்லூரி நாட்டு நலப் பணிதிட்ட மாணவர்கள் கொஞ்சம் நேரம் ஒதுக்கினால் இன்னும் நிறைய செய்யலாம்." என்கிறார். "நல்லா படிச்சுட்டு நல்ல வேலைல இருக்கும் போதே 'இப்படி ஆயிட்டாரே' - அவருக்கு பொண்ணு குடுத்து என்ன பண்றது' என சொந்தங்கள் சொல்வதாக அவர் அம்மா கவலைபடுகிறார்.

புத்தக கண்காட்சி 2009

எந்த வருடத்தையும் போல இந்த வருடமும் புத்தக கண்காட்சி சந்தோஷமாக அமைந்திருந்தது. மனைவி மற்றும் இரு தோழிகளுடன் வழி நெடுக்க பேசி கொண்டே நடந்தோம். கொஞ்சம் கால் வலி இருந்தும், இத்தனை புத்தகங்களை ஒரு சேர பார்க்கும் சந்தோஷம் அதையெல்லாம் மறக்கடித்து விடும். கவிதாவும் சில புத்தகங்களை இந்த முறை வாங்கியது கூடுதல் சந்தோஷம். அனு வழக்கம் போல கை நிறைய அள்ளி கொண்டிருந்தாள். நானும் கொஞ்சம் வாங்கியிருகிறேன். ரேவதியும் அவள் பங்குக்கு கொஞ்சம் வாங்கியிருந்தாள். மொத்தத்தில் புத்தகவாசம் இன்னும் சில மாதங்கள் இருக்கும் அளவுக்கு புதிய புத்தக பூக்கள் வீடு முழுவதும். மூத்த பத்திரிக்கையாளர் ஞானி, மற்றும் மனுஷ்யபுத்திரன், சாரு ஆகியோரை சந்திக்க நேர்ந்தது. மனுஷ் என்னைவிட அனுவுக்கு நல்ல தோழர். உயிர்மெயில் சாருவும், சுஜாதாவுமே நிறைய இருந்ததால் அதிகம் வாங்கவில்லை. கி.ரா வின் புத்தகங்கள் மூன்றும் (கோபல்ல கிராமம், கோபல்ல புரத்து மக்கள், நண்பர்களுடன் நான்), திலகவதியின் கல்மரம், இந்திராகாந்தி வாழ்க்கை பற்றிய ஒரு வரலாற்று நிகழ்ச்சிகளின் தொகுப்பு என என் புத்தக தேர்வு இந்த வருடம் கொஞ்சமாகவே இருந்தது. மற்றும் சில சுவரஸ்யமான சிறு புத்தகங்களும் உண்டு (காமத்து பாலில் உளவியல், ஆதிசங்கரரின் காம சாஸ்திரம்). கொஞ்சம் சமையல் புத்தகங்களும் இருந்தது (குடும்பஸ்தனய்யா.!). கடவுள் பற்றிய ஒரு உளவியல் ஆய்வு - ரேவதியின் புத்தகம். சுவரஸ்யமான தொகுப்பு. அனுவின் புத்தகங்களை அவர்களுடைய வலைபூவில் பார்க்கலாம். நெடுநாள் நண்பர் ஒருவரை சந்தித்தோம். திருமண பரிசு மற்றும் எங்கள் ஜமாவில் கலந்து கொண்டு எங்கள் நாட்களை மேலும் கலகலப்பாக்கினார். முள்ளும் மலரும் திரைப்படம் சனிக்கிழமை நள்ளிரவு வரை பார்த்தோம். ஞாயிற்று கிழமை கறி குழம்பு மறுபடி புத்தக கண்காட்சி உலாவுமாய் கழிந்தது - மூன்று பெண்களின் லூட்டி வாரத்து களைப்பை எல்லாம் ஓரம்கட்டி விட்டது. எல்லாரும் கிளம்பி போன ஞாயிற்றி கிழமை இரவு - வெறிச்சென்று இருந்தது. நானும் ரேவதியும் மட்டும் கொஞ்சம் டிவி பார்த்துவிட்டு தூங்கிவிட்டோம். மறுபடி ஒரு புத்தக கண்காட்சி வந்தாலும் இது போல இருக்காது என்று மட்டும் நிச்சயம்.

எம்.என். நம்பியார்

ஒரு வில்லன் நடிகராக மட்டுமே எம்.என். நம்பியார் என் இளம் வயதில் அறிமுகமானார். திரையில் உள்ள நடிகரை, குவித்த மணலில் அமர்ந்து டெண்ட் கொட்டாயில் படம் பார்க்கும் அனேகம் பேரும் திட்டுவது எனக்கு குதூகலமாக இருக்கும். அதிலும் என் பாட்டி படம் பாத்துவிட்டு வரும் வழியெல்லாம் திட்டுவார். பிற்பாடு கெட்டவர்கள் என்ற வர்க்கத்தின் அடையாளமே நம்பியாரின் முகமாய் ஆகி போனது. வெகு நாட்கள் பிறகு அவரின் வேறுபட்ட நடிப்பை பாக்கியராஜிம் மற்றவர்களும் எடுத்துகாட்டிய பிறகு மதிப்பு மென்மேலும் உயர்ந்து போனது. வித்தியாசமான குரல் அமைப்பு, வசன உச்சரிப்பு, கண் ஜாடை, குணசித்திர வேடங்களில் மற்றவர்க்கு இடம் கொடுத்து நடிக்கும் பாங்கு - என எந்த திலகத்துக்கும் கொஞ்சமும் குறைந்தவராக அவர் இல்லை. என்னை பொருத்தவரை - எம். ஆர். ராதாவும் நம்பியாரும் இல்லாமல் இருந்தால் திலகங்களின் நடிப்பு மட்டுமே நடிப்பு என பேசபட்டிருக்கும். எந்த வயதிலும் நல்ல உடல் பயிற்சி, ஐயப்ப பக்தி என மேன் மேலும் ஆச்சரியங்களை கொடுத்தவர். அவர் மறைவுக்கு பின்னாலாவது அவரை பற்றி நிறைய பேர் பேசுவது திருப்தி அளிக்கிறது. நாடகதன்மையும் - நாடக தன்மை இல்லாத நடிப்பும் வெவ்வேறு காலகட்டங்களில் அவர் கொடுத்தது - திலகங்கள் கூட செய்யாதது.

செய்தி மற்றும் குறும்படங்கள்...

பொதிகையில் ஒளிபரப்பப்படும் இன்னொரு நல்ல விஷயம் - செய்திப்படங்கள் மற்றும் குறும் படங்கள். பெரும்பாலும் இவை வட இந்தியா சார்ந்ததாகவே ஒரு காலத்தில் இருந்தன. தமிழில் "டப்" செய்து ஒளிபரப்புவார்கள். தற்போது தென் இந்தியா சார்ந்ததாகவும் இருக்கின்றன. நல்ல ஒலி ஒளி அமைப்பு மற்றும் கரு அமைப்பு கொண்டதாகவே இந்த குறும்படங்கள் மற்றும் செய்தி படங்கள் அமையும். இசை பெரும்பாலும் அற்புதமான இந்துஸ்தானி - சில அபூர்வமான நேரங்களில் இளையராஜா. சில நாட்கள் முன்பு கட்டிட கலை அமைப்பு பற்றிய ஒரு குறும்படம் ஒளிபரப்பப்பட்டது. வாசல் படி அமைப்பது தமிழர் கட்டிட கலை என்றும் காம்பவுண்ட் சுவர் அமைப்பது ஆங்கிலேய மரபு என்றும் எழுத்தாளரும் ஆராய்ச்சியாளருமான பிரபஞ்சன் சொல்லி கொண்டிருந்தார். பிறகு திராவிட கட்டிட கலை பற்றியும், ஊர் அமைப்பு பற்றியும் படிக்க விக்கிபீடியா உதவியது. ஒரு முறை தூர்தர்ஷனில் எலிபண்டா குகைகள் பற்றி அற்புதமான காட்சிகளுடன் ஒரு செய்திபடம் காண்பிக்கபட்டது. வேறு சில அரசியல் மற்றும் முந்தய தலைமுறை தலைவர்களின் வாழ்க்கை சம்பந்த பட்டதாக இருக்கும். இந்த குறும்படங்கள் மற்றும் செய்திபடங்களில் சேதி சொல்லும் குரல் மிக கவனம் ஈர்பதாக இருக்கும். கரகரப்பான அந்த குரலுக்குரிய முகத்தை ஒருமுறை அவர்கள் திரையில் காட்டலாம். என்ன - எப்போது எந்த நிகழ்ச்சி இருக்கும் - அது எப்போது முடியும் என அவர்களுக்கும் தெரியாது நமக்கும் தெரியாது.