அறிமுகம்...

My photo
சென்னை, தமிழகம், India
இலக்கியம், பயணம், மனிதர்கள், இசை, உணவு, நட்பு, சமுதாயம், கலை - இவை என் ஆர்வங்கள். பகிர்தலில் இன்பம் கொண்ட எல்லோருக்கும் நான் நண்பன். என்னை தொடர்ப்பு கொள்ள: muthu.gvmuthu@gmail.com / 9894238404

Wednesday, August 16, 2006

கண்ணும் கண்ணும்...

சில வருடங்களுக்கு முன்னர் நான் ஈரோட்டுக்கும் கோவைக்குமாய் வாரம் ஒருமுறையாவது அலைந்து கொண்டிருந்தேன் - ஒரு தொழில்முறை விஷயமாக. பெரும்பாலும் காலையில் போய் மாலையில்/இரவில் திரும்பும் பயணம் அது. அவினாசியில் மெயின் ரோடை ஒட்டிய ஒரு பள்ளியில் காலை பிராத்தனை நடைபெறும் - வரிசையில் நிற்கும் மாணவர்கள் - திருக்குறள் சொல்லும் மாணவன் அல்லது மாணவி - கொஞ்சம் என் கிராம வாழ்க்கையையும் பள்ளி வாழ்க்கையையும் நினைவுருத்தும் தருணங்களை அவை. பேருந்தின் சுகமான காற்றில் கண்கள் தாமாக மூடி கொள்ளும். கோவை-ஈரோடு பேருந்துகள் பெரும்பாலும் பாடல்களால் நிறைந்து இருக்கும். பெருந்துறை தாண்டிய பிறகு கண்விழித்தால் போதுமானது. ஒரு வெள்ளி கிழமை இப்படியான ஒரு பயணத்தில் நான் அவர்களை சந்தித்தேன். சந்தித்தேன் என்பது விட கவனித்தேன் என்பது பொருந்தும். அவர்கள் அனைவரும் பெண்கள் - பள்ளி மாணவிகள். பேருந்து நிலையத்திலேயே அவர்களின் கூச்சலும் சத்தமும்தான் பலமான கவனிப்பிற்க்கு உள்ளாகி இருந்தது. ஒரு பெண் அவர்களில் கொஞ்சம் என் கவனத்தை ஈர்க்கும் படி இருந்ததால் என் கவனிப்பு எந்த தடங்கலும் இல்லாமல் தொடர்ந்தது. பின்னர் ஒரு கோவை செல்லும் பேருந்தில் அவர்கள் கூட்டமாக ஏறினார்கள். பேருந்தில் உட்கார இடம் இல்லை எனினும் - என் கொள்கைக்கு மாறாக நின்று கொண்டு செல்லவும் திட்டமிட்டு, நானும் அந்த பேருந்தில் ஏறினேன். அவர்களில் யாரும் என்னை கவனிக்கவில்லை என்பது எனக்கு தெரியும்... ஒரு வார தாடியும், கலைந்த தலையும், காலையில் இருந்து கணிப்பொறியில் விலகாத சோர்ந்த முகமும் கொண்டவனை யார் கவனிப்பார்கள்..! அவர்களின் ஒருவருக்கு ஒருவரான கேலியும் கிண்டலும், ஓடும் பாடலுக்கு ஏற்ற ஆட்டமுமாய் பேருந்து களை கட்டியிருக்க, யாரும் அவர்களை எதிர்த்து ஒன்றும் பேசவில்லை - பெரும்பாலும் ரசனைதான் இருந்தது. அவர்களின் பேச்சில் இருந்து அவர்கள் கோவையில் ஒரு கபடி போட்டிக்காக ஈரோட்டில் இருந்து வருகிறார்கள் என புரிந்து கொண்டேன். என் கவனத்தை ஈர்த்த அந்த பெண் நல்ல குறும்புக்காரி. நல்ல குரல் வளம். இளமையும் கூட. நான் நின்று கொண்டு வருவதாலும், கூட்டத்தினாலும், கொஞ்சம் சுய முயற்சியினாலும் அவள் பார்வைக்கு தெரியும்படி நின்று கொண்டிருந்தேன். மாலை நேரமாதலால் கோவை-ஈரோடு சாலை வாகனங்களால் நிறைந்து காணப்படும் எனவே பேருந்தின் வேகம் ரொம்பவும் இருக்காது. இரண்டு மணி பயண நேரத்தில் எப்படியாவது அவள் பெயரை தெரிந்து கொள்ள வேண்டும் என்ற துடிப்பு என்னிடம் இருந்தது. அது என்னிடம் கை-தொலைபேசி இல்லாத காலம். எனவே வேறு ஒன்றும் செய்ய முடியாது. பெருந்துறை தாண்டி, விஜயமங்கலம் வரும் நேரத்தில் அவள் என்னை கவனித்திருப்பதை அவள் நடவடிக்கைகளின் மாறுதல்களில் இருந்து புரிந்து கொள்ள முடிந்தது. சில வினாடிகளாவது நான் அவளை கண்ணோடு கண்ணாக பார்க்க முடிந்தது. அவள் புன்னகை இன்னமும் மறக்க முடியாதது. எனினும் அவள் தனது வழக்கமான குறும்புகளை நிறுத்தவில்லை - அதனோடு என்னை கவனிப்பதையும் / நான் கவனிப்பதையும் தடுக்கவில்லை. நான் ஒன்றும் அழகனல்ல... எனினும் கொஞ்சம் சுமாரானவன். அப்போது வயது வேறு இளவயது. பெண்களுக்கே உரிய மெல்லிய நாணம் அவளிடம் இருப்பினும் நான் திரும்ப கவனிக்க படுவதை உணர்ந்தவுடன் மனசு பறக்க ஆரம்பித்துவிட்டது. அப்புறம் என்ன.. பார்வைகள்தான்.. கொஞ்சமாய் புன்னகைகள்தான். எனினும் பேர் கேட்க தைரியம் வரவில்லை. இப்படியாக இந்த காவியம் கோவை பேருந்து நிலையம் வரை தொடர்ந்து முடிந்து விட்டது. அவர்கள் இறங்கி கூட்டமாய் பேசி கொண்டு போய்விட்டார்கள்..இதற்கெல்லாம் அசந்து போகின்ற ஆசாமியா நாம். அடுத்தநாள் காலையிலேயே கோவை நேரு விளையாட்டு அரங்கிற்க்கு வந்து விட்டேன். எதிர்பார்த்த்படி அங்கு கபடி போட்டிகள் நடந்து கொண்டு இருந்தது. ஆனால் விளையாடி கொண்டு இருந்தது எல்லாமே ஆண்கள். வேடிக்கை பார்க்க என்ன இருக்கிறது. பெண்கள் போட்டி மதியம் என்றார்கள். 5 ரூபாய்க்கு புரோட்டா சாப்பிட்டு விட்டு மதியம் வரை காத்திருந்தேன். மதிய வேளையில் நிலவை பார்த்து இருக்கிறீர்களா... அவள் வந்த போது அப்படிதான் இருந்தது. விளையாட்டுக்கான உடையில் ஒரு நிலா. அவர்கள் அணி விளையாடும் போது - விளையாட்டு ஆர்வலர்களின் கூச்சலில் என் கூச்சலும் இருந்த்து. அவள் என்னை அடையாளம் கண்டு கொண்டாள்... மறுபடியும் சில புன்னகைகள்... விளையாடும் போதே பார்வைகள்... அப்புறம் என்ன...! அவர்கள் விளையாடுவதை முடியும் வரை பார்த்து கொண்டே இருந்து விட்டு...விளையாட்டு முடிந்ததும் .. சில மெல்லிய பார்வைகளுக்கு பிறகு.. சில ரகசியமாக கை அசைப்புகளுக்கு பிறகு.. அவர்கள் கிளம்பிபோய் விட்டார்கள். இரண்டு பேருக்கும் பேசி கொள்ள தைரியம் இல்லை. வேறு என்ன செய்ய முடியும்... எனக்கு இன்றும் இருப்பதை போன்றே அந்த பெண்ணுக்கும் நினைவுகள் இருக்குமா என்று தெரியவில்லை. அழகான பறவைகளுக்கு பெயர் தேவையில்லை என்பதை போல - அவள் நினைவுகளுக்கு பெயர் இல்லாத அவளே அடையாளம். ஆனால் அதற்கு பிறகு நான் கபடி போட்டிகளின் ரசிகன் ஆகிவிட்டேன்.

வியாபிக்கும் அறிவியல்

இந்த அளவுக்கு இது மக்களிடையே போய் சேரும் என்று யாரும் எதிர்பார்த்திருக்க முடியாது. அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளை விட இந்தியாவில் இது அதிகம். இவற்றின் அறிவியல் நுட்பங்கள் அதிகம். விற்பனை அதிகம். எல்லா தரப்பு மக்களிடையேயும் ஒரு ஆறாவது விரலாய்... இன்னும் கொஞ்ச நாட்களில் இன்னொரு மூளையாய்... மொபைல் போன்கள். வாரத்துக்கு மூன்று புதிய வசதிகளையாவது இன்றைய கை தொலைபேசிகளில் காண்கிறேன். சில வருடங்களுக்கு முன்பு வரை வெறும் பேசும் கருவியாக இருந்தது இன்று ஒரு கையடக்க கணிப்பொறியை உள்ளடக்கியதாக இருக்கிறது. சில மருத்துவ ரீதியான எச்சரிக்கைகளையும் மீறி எல்லா தலைமுறைகளும் இன்று மொபைல் போன்களை பயன்படுத்துகின்றன. தகவல் தொடர்ப்பு என்பது முன்னர் தபால் ரீதியாக இருந்தது. பின்னர் கணிப்பொறி சார்ந்ததாகவும், இன்று மொபைல் போன்களின் உலகமாகவும் உள்ளது. அறிவியல் வளர்ச்சி வரவேற்க்க வேண்டிய விஷயம்தான்... ஆனால் இது பிற்காலத்தில் முகம் பார்த்து பேசும் பழக்கத்தை முற்றிலும் மறந்து விடக்கூடிய சூழ்நிலையை உருவாக்கிவிட கூடாது. வாரம் ஒரு முறையாவது அறிவியல் இணைப்புகள் இல்லாத உலகில் இருந்து உணருங்கள். அது கொஞ்சமேனும் அற்புதமானது.

கிருஷ்ண ஜெயந்தி

கிருஷ்ண பகவானை எத்துனை பேர் கடவுளாக ஏற்று கொள்கிறார்களோ தெரியாது...ஆனால் தேசம் முழுக்க கோடிக்கணக்கானோர் ஒரு நண்பனாக, ஒரு வழிகாட்டியாக, ஒரு குருவாக ஏன் ஒரு மிக சிறந்த காதலனாக கூடவும் ஏற்று கொள்கிறார்கள்.. இந்த முறை சி.என்.என். தொலைக்காட்சி இந்த ஜென்மாஷ்டமியை ஒரு முக்கிய செய்தியாக கருதி இந்தியாவின் பல பகுதிகளிலும் எப்படி ஒரு திருவிழாவாக கொண்டாடுகிறார்கள் என்று ஒளிபரப்பி கொண்டிருக்கிறது. நல்ல நட்புக்கும், அற்புதமான காதலுக்கும், தெளிவாக அரசியல் வித்தைகளுக்கும் கிருஷ்ணபகவான் ஒரு அடையாளமாக கொள்ளபடுவதை, அதனை தேசத்தின் அனைத்து தரப்பு மக்களும் ஒப்பு கொள்வதை உலக நாடுகள் கவனிக்கின்றன. மிக சிலரை மட்டுமே கடவுளாகவும் அதே நேரம் மனிதனாகவும் உலகம் ஒப்பு கொள்கிறது. ஒரு மனிதன் தன் வாழ்நாளில் செய்யும் அனைத்து பாவ புண்ணியங்களையும், நல்லது கெட்டதுகளையும் கடவுளாக பிறந்தாலும் செய்யவேண்டியுள்ளது என்பது கிருஷ்ணனின் வாழ்க்கை. சில சித்து வித்தைகள் இருந்தாலும் அவற்றை எல்லாம் எல்லா மனிதர்களின் உள்மனது ஆசைகளாகவே வெளிப்படுத்தபட்டு இருக்கின்றன. ஜெயமோகனின் ஒரு சிறுகதை உண்டு - யாதவர்களின் அழிவுக்கு பிறகு கிருஷ்ணர் தனது அவதாரத்தை முடித்து கொள்ள வேண்டி ஏகலைவனின் அம்புக்கு பலியாக தயாராகிறார். இறுதியாக தன் காதலி ராதையை பார்க்க கோகுலம் செல்கிறார். அங்கு தன்னை போலவே ஒரு சிறுவனின் குழலோசைக்கு பசுக்களும் பறவைகளும் மயங்கி நிற்பதை காண்கிறார். அவருக்கு தாகம் எடுக்கிறது. ஒரு குளத்தில் நீர் அருந்த குனிகிறார். தண்ணீரில் அவர் முகத்தின் பிம்பத்தை காண்கிறார். முகம் பொலிவிலந்து இருக்கிறது. சுருக்கங்கள் முகத்தில். தலைமுடிகள் கொஞ்சம் நரைத்து இருக்கின்றன. சில நிமிட சிந்தனைகளுக்கு பிறகு அவர் ராதையை காணாமலேயே திரும்பி விடுகிறார் என கதை முடிகிறது. மிக சிறிய ஒரு கற்பனை சம்பவத்தை சொல்லியிருந்த போதிலும் அதில் எல்லா மனிதர்களது அந்திம கால இயல்புகளும் சொல்லபட்டு இருக்கின்றன. மகாபாரதத்தின் எல்லா கிளை கதைகளிலும் கிருஷ்ணர் ஒரு பாத்திரமாகவே இருந்திருக்கிறார். எல்லா சூழ்ச்சிகளுக்கு பின்னாலும், எல்லா சாதனைகளுக்கு பின்னாலும், எல்லா தந்திரங்களுக்கு பின்னரும் அவர் இருந்திருக்கிறார். பகவத்கீதை சரியான முறையில் படிக்கபட்டால் அவற்றில் சாணக்கியருக்கு இணையான அரசியல் தந்திரங்களை காணலாம். என்.டி.ஆர் ஆக இருந்தாலும், கேலண்டர் கிருஷ்ணராக இருந்தாலும், எந்த கோவில் அவதார வடிவாக இருந்தாலும்... கிருஷ்ணர் நிறைய வாழ்க்கை முறை சார்ந்த கருத்துகளில் பின்பற்றபட வேண்டிய தோழன் என்பது உண்மை.