அறிமுகம்...

My photo
சென்னை, தமிழகம், India
இலக்கியம், பயணம், மனிதர்கள், இசை, உணவு, நட்பு, சமுதாயம், கலை - இவை என் ஆர்வங்கள். பகிர்தலில் இன்பம் கொண்ட எல்லோருக்கும் நான் நண்பன். என்னை தொடர்ப்பு கொள்ள: muthu.gvmuthu@gmail.com / 9894238404

Sunday, March 26, 2006

இங்கேயும் கொஞ்சம் பாருங்கள்...

மரபு மீறி புனைந்த கவிதைகள்...

http://onceinourlife.blogspot.com/

தொலைகாட்சியும் முகமறியா மனிதர்களும்...

நேரடி ஒளிபரப்புகளான பாடல் வழங்கும் அல்லது ஒளி/ஒலிப்பதிவு செய்யபட்ட பாடல் வழங்கும் நிகழ்ச்சிகளை பார்த்ததுண்டா நீங்கள்.. ஓவ்வொருமுறை கோவை வரும்போதும் எப்படியாவது தொலைகாட்சியில் பார்க்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டு விடுகிறது..மோசமான உச்சரிப்புகள், அர்த்தமில்லாத கேள்விகள், உபயோகமில்லாத பதில்கள்...தொகுப்பாளினியின் உடையலங்காரம் மட்டுமே (ரகசியமான) கவனிப்புக்கு உள்ளாகிறது... பாடல்களை விட பேசும் விஷயங்கள் முட்டாள்தனமானவை. எனினும் முகமறியா மனிதர்களுடன் கொள்ளும் பேச்சு சார்ந்த உறவு கவனிக்கதக்கது. சமீப சில வருடங்களில் இத்தகைய தொலைபேசி மனிதர்கள் அதிகமாகி உள்ளார்கள். தொலைகாட்சியின் டி ஆர் பி ரேட்டிங் இத்தகைய விளம்பரதார் நிகழ்ச்சிகளை முன்னிலைபடுத்துகிறது. தங்கள் நிஜவாழ்வில்
பார்க்கும் கொடுமையான முட்டாள் மனிதர்களை விட...முட்டாள்தனமான விஷயங்களை விவாதிக்கும் (அழகான) தொகுப்பாளினிகள் பேர் பெருகிறார்கள். இது ஒரு போதையாகி கொண்டு வருகிறது. எல்லா இந்திய சேனல்களும் இதில் இறங்கியுள்ளன - பாடல்கள், கேள்வி பதில், வேடிக்கை விளையாட்டுகள் என முகங்கள் மாறினாலும் - இந்த போதையான முட்டாள் உலகத்துள் ஆழ்ந்து போகும் சில நிமிட ஓய்வு எல்லாருக்கும் தேவைபடுகிறது... பேனா நட்பு போல இது தொடரும் நட்பு இல்லை. வானொலி போல ஒரு முகமறியா பந்தம் இல்லை. தொலைகாட்சி தன் மாய கரங்களில் மக்களை மெல்ல கட்டிபோட்டு உள்ளது. முட்டாள்களின் பெட்டி இன்று தேடிவாங்கும் பொருளாக மாறிவிட்டது. இணையமும் இந்த வரிசையில் இணையும் காலம் இருக்கிறது. இணையம் மெல்ல மெல்ல தன் புத்திசாலி முகமூடிகளை விட்டு சாதாரண மனிதர்களின் பொழுதுபோக்கு சாதனமாக மாறிவருகிறது. கணிப்பொறி நிறைய வீடுகளில் மின்னஞ்சல் தவிர பாடல் கேட்கவும் படம் பார்கவுமே பயன்படுத்தபடுகிறது. அறிவு சார்ந்த பொழுது போக்கு மெல்ல மெல்ல விலகி கவர்ச்சியும் வேடிக்கையும் அர்த்தமில்லாத பரபரப்பு செய்திகளும் நிறைந்த பொழுதுபோக்கு மக்களிடையே முன்னிலை படுத்தபடுகிறது... எனக்கு சுஜாதாவின் என் இனிய இயந்திரா நினைவு வருகிறது... என் காலம் வரை வேடிக்கை பார்க்கலாம்...மனிதர்களையும் அவர்களது மாறிவரும் முட்டாள் உலகங்களையும்...

அம்மாவின் கடிதம்...

ஆனந்தவிகடனின் 81 ஆவது மெகா சிறப்பிதழில் தமயந்தியின் வாக்குமூலம் என்ற சிறுகதையை வாய்ப்பு இருந்தால் படித்து பாருங்கள். ஒரு தாயின் மனதில் இருந்து எழுதபடும் கடிதத்தின் மொழியில் கதை அமைந்துள்ளது. தாய் தனது மகனிடம் அவளது அன்பையும் அவனுடனான தன் பிணைப்பையும் சொல்கிறாள். சில வாக்கியங்கள் நம் மனதின் ஆழம் தொடுகின்றன.. தன்னை பாராட்டும் முதல் ஆண்மகனாக தன் மகனை அவள் குறிக்கிறாள். பிரிந்த உறவின் சாயல்களை பார்க்கும் முகங்களில் எல்லாம் தேடும் பரிதவிப்பு கதையில் இழையோடுகிறது. குழந்தையுடனான வாழ்வின் சில சந்தோஷ தருணங்களை அவள் தனிமையில் நினைக்கிறாள். அவனுக்கு தெரியுமோ தெரியாதோ அவனுக்கு மறுபடியும் அந்த சம்பவங்களை நினைவுறுத்துகிறாள். இந்த கதை படிக்கும்போது எனக்கு என்
அம்மாவின் நினைவு வருகிறது. தன் நட்பு, ஆசைகள், திறமைகள், முதன்மைகள் எல்லாம் இழந்து அப்பாவுக்காகவும் கணவனுக்காகவும் குழந்தைகளுக்காகவும் வாழும் போன தலைமுறை பெண்களின் ஒரு அடையாளம். ஒவ்வொரு முறை ஊருக்கு போகும் போதும், தினம் தொலைபேசியில் பேசும்போதும் எங்களை பற்றியே கவலைப்படும் ஒரு ஜீவன்...சில நிமிடங்கள் ஒதுக்கி அவர்கள் சொல்லும் விஷயங்களை கேட்டாலே ஒரு மிகப்பெரிய அங்கீகாரம் கிடைத்த மகிழ்ச்சியை என்னால் கவனிக்க முடிகிறது. தாய்க்கும் மகள்/மகனுக்கும் உள்ள பிணைப்பு வார்த்தைகளால் சொல்ல முடியாதது. அது போலவே தந்தைக்கும் மகள்/மகனுக்கும் உள்ள பிணைப்பு. மனித உறவுகளின் மதிப்பு கொஞ்சம் கொஞ்சமாக கேள்வி குறியாகும் நம் வாழ்க்கை முறையில் இந்த கதை மனதின் ஈரம் கசிய வைக்கிறது.

நினைவுகளின் கல்லறைகள்.

கிராமத்துக்கு திரும்பி வந்த
கிழவன், ஓடைக்கரை வழியே
தன் பழைய காதலியின் புதை
குழியைத் தேடிப் போகிறான்.
ஒற்றையடிப் பாதையில் ஓர்
ஒரு மனித ஊர்வலம்.

பெரும்பாலான பயணங்களில் நான் தாண்டி போகும் இடுகாடுகளில் இந்த கவிதை பொருந்தி போகிறது. நகரவாழ்வின் சமூகத்துக்கு உட்படாத கிராம மனிதர்களின் மனம் கொள்ளும் வாழ்க்கையை இந்த கவிதை சொல்வதாக உணர்கிறேன். உடலுக்கு ஒவ்வாமல் மனதையும், மனதுக்கு ஒவ்வாமல் உடலையும் செலுத்தி கொண்டு நாம் இருப்பதாக வைரமுத்து சொல்லியிருப்பது நிஜம். இந்த கவிதை மனதை மனதோடு செலுத்திய ஒரு ஆன்மாவின் பயணம்.

" ஜன ஆரண்ய " 1977 - 2006

சத்தியஜித் ராயின் "ஜன ஆரண்ய" திரைப்படம் பற்றி சுஜாதாவின் கணையாழியின் கடைசி பக்கங்களில் படித்து இருக்கிறேன். 1977ல் அவர் இந்த திரைப்படம் பற்றி எழுதியிருக்கிறார். வசனங்களை சத்தியஜித் ராயே எழுதியியிருக்கும் இந்த திரைப்படம் ஒரு தூய்மையான இளைஞனை மெல்ல மெல்ல மாசுபடுத்தி அவனிடம் கொஞ்ச நஞ்சம் மிச்சமிருக்கும் பிரக்ஜையை எல்லாம் கழற்றிவிடும் நகரத்தின் அசுர குணங்களை சொல்கிறது. 1977ல் இருந்து இன்று 2006 வரை நகரம் தன் முகத்தை மாற்றி கொள்ளவே இல்லை...அது இன்னும் நகரம் தேடிவரும் அப்பாவி தூய்மையான இளைஞர்களை குறிவைத்து காத்துகொண்டு இருக்கிறது. DVDல் இந்த திரைப்படம் கிடைத்துள்ளது. அடுத்த வாரத்துக்குள் பார்த்துவிடுவேன். அப்புறம் நாம் விவாதிப்போம்.

பாரதி..ஒரு மனிதனாக...

பரபரப்பான சமூக வாழ்க்கை...சக மனிதர்கள்.. அவர்களின் உறவுகளின் மதிப்பு அறியாத வேகமான வாழ்க்கை... எப்படி வாழ வேண்டும் என்பதற்க்கு கூட சொல்லி தரும் நிறுவனங்கள்... பாரதியின் இந்த கவிதை பகுதி கொஞ்சம் நம்மை நிறுத்தி யோசிக்க வைக்கிறது

தேடிச் சோறுநிதந் தின்று - பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம்
வாடித் துன்பமிக வுழன்று - பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து - நரை
கூடிக் கிழப்பருவ மெய்தி - கொடுங்
கூற்றுக் கிரையெனப் பின்மாயும் - பல
வேடிக்கை மனிதரை போல - நான்
வீழ்வே னென்றுநினைத் தாயோ?

நின்னை சிலவரங்கள் கேட்பேன் - அவை
நேரே யின்றெனக்குத் தருவாய் - என்றன்
முன்னைத் தீயவினை பயன்கள் - இன்னும்
மூளா தழிந்திடுதல் வேண்டும் - இனி
என்னைப் புதிய வுயிராக்கி - எனக்கேதுங்
கவலையறச் செய்து - மதிதன்னை மிகத்
தெளிவு செய்து - என்றும்
சந்தோஷங் கொண்டிருக்கச் செய்வாய்...

தான் எப்படி இருக்கவேண்டும் என நினைத்திருந்த மனிதன்... ஒவ்வொரு மனிதனுக்கு உள்ளும் வாழவேண்டிய கவிதைகளை தந்த கவிஞன்... பாரதியின் கவிதைகள் பற்றிய ஆய்வு புத்தகம் ஒன்று கிடைத்திருக்கிறது... இன்னும் எழத நிறைய இருக்கிறது.. நாம் பகிர்ந்து கொள்வோம்...

தலித் இலக்கியம் - புத்தக பார்வை

தமிழில் தலித் இலக்கியம்... அற்புதமான கை புத்தகம்... தலித் இலக்கியங்கள் பற்றிய பார்வையை மேலும் கூர்படுத்தும் புத்தகம்.. சில கவிதைகள்... கவிதைகளில் தோற்றமும் அமைப்பும் ஆகிய பகுதிகள் கவர்கின்றன... முகில் என்பவரின் தொகுப்பு இது...தலித் இலக்கியத்தின் தன்மைகளை அவர் கீழ் கண்டவாறு வகைபடுத்துகிறார். சாதியை எதிர்ப்பது, தலித் பிரச்சனைகளை பேசுவது, கலக இலக்கியத்தை உருவாக்குவது, கடுமையான அரசியல் எதிர்வினையை உசுப்பிவிடுவது, ஒடுக்கபட்ட நிலைமையின் ஆழமான உளவியல் உலகத்தை நோக்கி பார்வை நீள்வது, பொருளாதார சமத்துவம், தலித் விடுதலை போராட்டத்தின் வடிவம். புத்தகம் தலித யார் என்பதில் இருந்து தலித் இலக்கியம் பற்றிய விரிவான பார்வைகளோடு தொகுக்கபட்டு உள்ளது. தலித் பண்பாடு, தலித் அரசியல் மற்றும் தலித் படைப்பாளிகள் பற்றிய விவரங்களும் இடம்பெறுகின்றன.

இதில் இடம்பெற்றுள்ள சில கவிதைகள் / தெருக்கூத்து பாடல்கள் என்னை தலித் கவிதைகளை நோக்கி நேர்பார்வை கொள்ள வைக்கின்றன. உங்கள் பார்வைக்கும் சில...

காலம் மாறி போச்சுங்க
ஆண்ட மார்களே - ஒங்க
வாலக் கொஞ்சம் ஆட்டாதீங்க
ஆண்ட மார்களே..

பறையஞ் செருப்பு போட்டு வந்தா
பஞ்சாயத்து வைக்கிறிங்க - எங்க
பறச்சி கொஞ்சம் அழகாயிருந்தா
ஆண்ட மார்களே - ஒங்க
பல்லக் கொஞ்சம் காட்டுறீங்க
ஆண்ட மார்களே..

- கடலூர் மாவட்டம், விருத்தாச்சலம் வட்டம், நாரையூர் கிராமத்தை சேர்ந்த தெருக்கூத்து வாத்தியார் வே.சடைமுத்து பாடும் இந்த பாட்டு மேல் சாதிகாரர்களை தார்மீக கோபத்தோடு கிண்டலடித்து குத்தி கிழிக்கிறது. இவை நிச்சயம் தலித் மக்க்ளிடையே உற்சாகத்தையும் ஆவேசத்தையும் உண்டு பண்ணும். இன்னும் ஒன்று...

நெத்தி பொட்டுல
ஒலக்கையால அடிச்சு
கறி போடுறப்பல்லாம்
ஊரிலிருந்து கிண்ணம் வரும்.
வேலையில
கொற கண்டுபிடிக்கிறப்ப மட்டும்
'மாட்டுகறி திங்கிற பசங்க' தான்னு
வசவா மாறும்.

உங்கள் விமர்ச்சனங்களை வரவேற்கிறேன்.

இருட்டில் மறையும் காமம்.

ஆன்மீகமும் பாலுணர்வும் பற்றிய ஒரு ஓஷோவின் புத்தகம் சில அற்புதமான கருத்துகளை சொல்கிறது...

" தந்திராவின் பொருள்... நீ கடந்து செல்வதற்குரிய ஒன்றாக காமத்தை பயன்படுத்தலாம் என்பதுதான். காமத்தை நீ முழுமையாக புரிந்து கொண்டு விட்டால். ஞானிகள் பேசிய பேரின்பம், எல்லையற்ற ஆனந்தம் ஆகியவைகளை நீ புரிந்து கொள்ள முடியும்..."

இந்த புத்தகம் காமம் பற்றிய சில வித்தியாசமான புரிதல்களை எனக்குள் உண்டாக்கியுள்ளது.

"தந்திரா சொல்கிறது... நீ எப்படி இருந்தாலும் உன்னை முழுமையாக ஏற்றுகொள். நீ பல பரிமாணங்களில் நிறைந்துள்ள சக்தியின் புதிர். அதை ஏற்று கொள். எல்லா சக்தியோடும் மென்மையோடு, விழிப்புணர்வோடு, அன்போடு, அறிவோடு நுழைந்து செல். அதனோடு செல். அப்போது எல்லா ஆசைகளும் அதை கடந்து செல்வதற்கான வாகனமாகிவிடும். எல்லா சக்தியும் உதவியாகிவிடும். "

"அழகற்ற விதையை நீ தூக்கி எறியும்போது, அதனுடன் சேர்ந்த அழகான மலரையும் நீ எறிந்து விடுகிறாய்... - காமம் உட்பட எதனையும் நீ போராடி வென்று விட்டால், அடக்கிவிட்டால் நீ உயிறற்றவனாகிவிடுவாய்...கோபம் இல்லாத இடத்தில் கருணை இருக்காது...காமம் இல்லாவிட்டால் அன்பும் மறைந்து விடும்..."

தந்திரா ஒரு அற்புதமான பயிற்சி... வாழ்வியல் பற்றியும் காமம் பற்றியும் நுட்பமான புரிதல்கள்...ஓஷோவின் வார்த்தைகளில் சொல்லபட்டு உள்ளன... புத்தகத்தை முழுமையாக படித்து முடிக்கவில்லை... படித்தபின் வலைபதிவில்... சமுதாய சர்ச்சைக்கு உட்பட்ட நிறைய விஷயங்களை எழுதுவேன் என நினைக்கிறேன்...

யாராவது கொடும்பாவி எரிக்கவேண்டும் என்றால் பொம்மையும், ரேசன் மண் எண்ணையும் தீப்பெட்டியும் வாங்கி வைத்து கொள்ளுங்கள்...

வார்த்தைகளிலும் சிவப்பு...

சிங்கம் பேசி பார்த்திருக்கிறீர்களா.. ஜெயகாந்தனை பேசவிடுங்கள்... கர்ஜனையின் அர்த்தம் புரியும்... சென்ற வார ஆனந்தவிகடனின் ஒரு பேட்டி... பதில்களில் இன்னும் கிழட்டு சிங்கத்தின் கோபம்...

என்னை கவர்ந்த சில பதில்கள்... இவை பற்றிய விவாதங்கள் இனி வரும் பதிவுகளில்...

"கருத்து சொல்கிறவன் விமர்ச்சனங்களை மனதில் வைத்து கொண்டு சொல்வதில்லை...ஏனெனில் கருத்தே ஒரு விமர்ச்சனம்தான்..."

"எதை வழிபடுகிறாயோ அதுதான் இறை! வழிபட ஆரம்பித்த பின் மனிதன் என்ன..? இறைவன் என்ன..? பெரியாரை வழிபட்டால் பெரியார் கடவுள். பகுத்தறிவை வழிபட்டால் அது கடவுள். எதையாவது ஒன்றை வழிப்படுங்கள். "வழிபடுதல்" என்றால் பின்பற்றுதல் என்று பொருள். கடவுளை கூட சரியாக வழிபடாமல் போனதுதான் நமது பிரச்சனை. எதை வழிபட்டாலும் உண்மையாக வழிபடுங்கள்..."

"மாற்றங்களால்தான் உலகம் தன் சுவரஸ்யத்தை இழக்காமல் இருக்கிறது...பபிள்கம் வாங்கும் பணத்தில் கூட இப்போது பத்திரிக்கைகள் கிடைக்கின்றன. ஆனால், தனி நபர்களின் போக்கில் மூக்கை நுழைக்கிற போக்கு அதிகரித்து இருப்பது கசப்பாக இருக்கிறது. எனக்கான முடிவுகளை வேறு யார் யாரோ எடுக்கிறார்கள். அது நன்மையாக இருந்துவிட்டால் பிரச்சனை இல்லை. ஆனால் எல்லா நேரங்களிலும் என் முடிவுகளை வேறு யாரோ எடுக்க முடியாது - எடுக்கவும் கூடாது. "

"மனுஷன் என்றால் எல்லாம் இருக்கும். யாருக்கு இல்லை இங்கே கர்வம் ஆணவம்.? ஏன் உங்களுக்கு இல்லையா..? இருப்பதால்தானே எனக்கு அகங்காரம் அதிகம் என என்னிடமே சொல்கிறீர்கள். அடுத்தவர்களுக்காக என்னால் வாழ முடியாது. நான் எனக்காகவே வாழ்கிறேன். நீங்களும் உங்களுக்காகவே வாழுங்கள்..."

கலீல் ஜிப்ரானும் என் காதல்களும்

அது ஏனோ தெரியவில்லை - எனக்கு இதுவரை காதல் என்று வந்ததில்லை. வந்த காதலை எல்லாம் யாரிடமும் சொன்னதில்லை - அது காதல் என்று நான் ஒத்து கொள்ளாததினால்... பள்ளி கூட காலத்தில் வந்தது காதல் இல்லை என்பது என் கருத்து. அழகான பெண்கள் எல்லாம் காதலிகள் - அவர்களின் அம்மாக்கள் எல்லாம் அத்தைகள். குறிப்பாக "ஆண்ட்டி" என்ற வார்த்தை அழகான பெண்களின் அம்மாக்களுக்கு மட்டும்தான் என்றிருந்த காலம் அது. பார்க்கும் பெண்களின் கழுத்துக்கு கீழே செல்லும் பார்வையை தவிர்க்க முடியாத வயதில் வருவது - இனகவர்ச்சியே இன்றி - காதல் இல்லை - எனினும் மறக்கமுடியாத அனுபவங்களை அது
எனக்கு தந்திருக்கிறது.

கலீல் ஜிப்ரானின் கண்ணீரும் சிரிப்பும் கவிதை / கட்டுரை தொகுப்பு - நான் இழந்த காதல்களை கொஞ்சமாக - சில பெண்களின் நினைவுகளோடு இரவுகளில் மீட்டுதருகிறது.


நாம் முதன் முதலாக சந்தித்த
நாள் நினைவிருக்கிறதா உனக்கு?
நமது உணர்ச்சிகளால் சூழப்பட்டு
காதல் தேவதைகள் தாலாட்ட
ஆன்மாவின் ராகங்கள் பாடினோம்...

கானகத்தில் நாம் கைகோர்த்து
நடந்து திரிந்த காலடி சுவடுகளையும்,
முகத்தோடு முகம் இணைத்து பின்
ஒருவருக்குள் ஒருவர் மறைந்து
மூழ்கிப்போனோமே நினைவிருக்கிறதா?

உன்னை பிரிந்தபோது என்னுதட்டில்
முத்தமழை பொழிந்தது மறந்ததா?
காதலின் பொருளை அது சொன்னது
சொர்க்கத்தின் ரகசியங்களை ஒருபோதும்
நாவினால் உரைப்பது என்பது முன்னுரைதான்
அதன்பின் நீண்ட பெருமூச்சுகள்

பெருமூச்சு என்னை புதிய உலகிற்கு
இதயம் மகிழ இழுத்து செல்கிறது
மீண்டும் நாம் சந்திக்கும் வரை
மகிழ்ச்சி மறவாது நிலைத்திருக்கும்
கன்னங்களில் கண்ணீர் வழிய நீ
மீண்டும் மீண்டும் என்னை முத்தமிட்டு
"பூமியில் மனிதர் இணைவது பிரிவது
உலகியல் உள்நோக்கங்களாலே"
உளமார சொல்லி பிரிந்தாய் நீ....

... கவிதைகள் மெல்ல மெல்ல நீள்கின்றன...காதலின் நீட்சி கவிதைகளில் வார்த்தைகளில்... அந்தி வான சிவப்பின் ஆழம் போல... காதலும்...காதல் கவிதைகளும்...

புரிதலில் உண்டு தோழமை...

தோழமையில் சில வகை உண்டு. சிலருடன் நன்கு பழகிய பின் மட்டுமே தோழமை உணர்வு தோன்றுகிறது. சிலருடன் சில மணித்துளிகளில். பெரும்பாலும் ஆண் பெண் உறவுகாதலாகவோ, உடல்சார்ந்த உறவாகவோ அல்லது ரத்தபந்தமாகவோதான் எடுத்துகொள்ளபடுகிறது. ஆண் பெண் தோழமை இன்னும் சரியான பக்குவத்தில் சமுதாயத்தில் எடுத்து கொள்ளபடவில்லை. பெருநகரங்களில் இது மேலும் குழப்பம். சென்றவாரம் கள்ளகுறிச்சியில் ஒரு தோழியை சந்தித்தோம்.

நானும் என் தோழியும் இந்த புதிய தோழியை சந்திக்க முடிவு செய்தபின், அந்த பெண்ணையும் கூப்பிட்டு சொல்லி ஒரு கோவிலில் பார்க்க ஏற்பாடு ஆனது. இந்த
புதிய தோழி கைதொலைபேசி வாயிலாக அறிமுகமானவர். SMS, தொலைபேசி பேச்சு என்றே முகம் தெரியாமல் வளர்ந்த நட்பு. நான் பொதுவாக என் புதிய நட்புகளை நடைமுறை நட்புகளோடு கலந்துவிட்டு விடுவேன் - குறிப்பாக பெண் நட்புகளை - இது பல எதிர்கால குழப்பங்களை தவிர்க்கிறது. நேரில் பார்க்கலாம் என முடிவு எடுத்தபின் என் அப்பாவிடன் சொன்னேன். ஆச்சரியம் - மறுப்பு ஏதும் இல்லை. அவர்களுக்கு தெரியாமல் ஏதும் செய்யும் உத்தேசம் இல்லை - இது அடிப்படையில் உறவில் நம்பிக்கையை கொடுக்கிறது. தம்பி - அம்மா எல்லாரிடமும் விஷயம் சொல்லியாகிவிட்டது. சென்று வந்த பிறகு கேள்விகளில் வில்லங்கம் இல்லை - என்னையும் என் நட்புகளையும் மதிப்பாக எடுத்து கொள்ளும் குடும்பம் என் பாக்கியம். மெல்லிய விசாரிப்பு இருந்தது. பதில்களில் ஒரு செளகரியம்
இருந்தது. எனக்கும் என் சில தோழிகளுக்கும் உள்ள நட்பு நான் எண்ணி சந்தோஷப்படும் சில விஷயங்களில் ஒன்று. ரொம்ப நாள் பழக்கம் இல்லாமலும் சட்டென மனம் ஒன்று படும் நட்பு மிக சிலரிடமே அமைகிறது. அப்படி அமைவது பெண்ணாக இருப்பின் அதன் இழையோடு ஒரு மெல்லிய இழை போல நேர்மையான காதல் இருக்கிறது. இருவருக்கும் அவர் அவர் நிலை அறிந்து, அடுத்தவரை புரிந்து கொண்டு, தள்ளி நின்று ரசித்து, அடுத்தவர் வாழ்க்கைக்கு மதிப்பு கொடுத்து, வாழ்வில் படிகளில் கை அணைத்து கொண்டு செல்லும் மனோபாவம் கொண்ட நட்பு அமைந்திருப்பின் - கை கொடுங்கள் நண்பரே நீங்களும் என்னை போல் ஒருவரே. இன்றைய சமுதாய அமைப்பிலும் இந்தகைய நட்பை புரிந்து கொள்ளும் வெகு சிலருக்கு இது சரி. மற்றவர்களுக்கு..? - வழக்கம் போல குதர்க்கமான கேள்விகள்தான்...

மனம் தொட்ட பயணம்

உத்திரமேரூர். ராஜேந்திர சோழ சதுர்வேதிமங்கலம். பாண்டவவனம். எல்லாம் ஒரே ஊர்தான். சென்ற வாரம் இந்த சின்ன ஊருக்கு நானும் என் தோழியும் சென்றிருந்தோம். கி.பி.750ல் நந்திவர்ம பல்லவனால் 1200 வைணவ வேதம் வல்ல அந்தணர்களுக்கு தானமாக வழங்கபட்ட ஊர்.கிட்டதட்ட இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தய பெருங்கற்கால ஈமசின்னங்கள் இவ்வூரில் காணப்படுகின்றன. பத்தாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சோழப்பேரரசின் காலத்தில் குடவோலை முறையும் தேர்தல் வழிமுறைகளும் தேர்வு தகுதிகளும் சுயாட்சி பற்றியும் உலகுக்கு சொன்ன ஊர். இங்குள்ள எட்டாம் நூற்றாண்டு பெருமாள் கோவிலுக்கும் அருகில் உள்ள சுயம்பு முருகன் கோவிலுக்கும் சென்றிருந்தோம். அற்புதமான கோவில். கை தொடும் தூரத்தில் தெய்வங்கள். எல்லாம் மர சிற்பங்கள். வெறும் தைலகாப்பு மட்டும்தான். ஒரு கோவில் பிரதிநிதி எங்களுடன் வந்து கடவுள்கள் பற்றி சொன்னார். நல்ல ஆங்கில ஞானம். சிவனுக்கும் கூட நாமம் போட்டு
வைணவராக்கி இருக்கிறார்கள். அரியும் அரனும் ஒன்று என்று சொல்லும் கோவில். முருகன் கோவில் போகும் வழியில் வார சந்தை. எத்தனை நாள் ஆகிவிட்டது
இந்தகைய அனுபவத்தில். அந்தி கருத்த மாலை நேரம், நெஞ்சு நிமிர்ந்து பார்க்கவைக்கும் கோவில் கோபுரம். மெல்லிய குரலில் வைணவ மந்திர பாராயணம், தோழியோடு கோவில் பிரகாரம் சுற்றியபோது மனது மெல்லியதான திருப்தியில் நிறைந்திருந்தது. இந்த ஊரை பார்ப்போம் என்று பயண குறிப்பே இல்லை. சட்டென முடிவெடுத்தோம். ஆனால் நல்ல முடிவு. முருகன் கோவிலும் அபாரம். ஐராவதம் யானையை வாகனமாக கொண்ட சுயம்பு முருகன். கொடி கம்பம் அன்னாந்து பார்க்கையில் வானில் சப்தரிஷிமண்டலம். என்னை போலவே என் தோழிக்கும் இது அற்புதமான அனுபவம். ஊரை சுற்றி நிறைய கோவில்கள் இருக்கின்றன. பின்னர் ஒருமுறை ஒரு முழு நாள் ஒதுக்கி வரவேண்டும். சென்னையில் பரபரப்பு இல்லாத வயல்வெளிகளும் நிறைவான கோவிலும் இன்னும் சில நாட்களுக்கு மனதெல்லாம் மலர்ந்து இருக்கும். இங்கு நடக்கும் மகாபாரத கதையின் கூத்து பற்றி கேள்விபட்டு இருக்கிறேன். வாய்ப்பை ஏற்படுத்திகொண்டு நேரில் ஒருமுறையாவது பார்க்கவேண்டும். கோவில் பற்றி ஒரு புத்தகம் வாங்கியுள்ளேன். சுவரஸ்யமான தகவல்களை பின்னர் வலை பதிவில் பகிர்ந்து கொள்கிறேன்.

Sunday, March 12, 2006

சொல்லி கொடுத்தது...

வசிஸ்க்டரின் ஒரு சுலோகத்தின் பொருள்

"இந்த தவளைகள் ஒன்று சொன்னதையே மற்றொன்று குருவைபோல் மீண்டும் சொல்கிறது. தவளைகளே! நீங்கள் அனைவரும் அழகாக சொல்லும் போது நீரின் அனைத்து பகுதிகளும் நன்றாகிவிடுகின்றன. "

பழங்கால வேதம் படிக்கும் முறை இவ்வாறு விளக்கபடுகிறது. குரு ராகத்துடன் படிக்கும் வேத மந்திரத்தை சீடர்கள் ராகத்துடன் தொடர்கிறார்கள். சிறு வயதின் மனப்பாட பழக்கம் இவ்வாறு கற்பிக்கபட்டு வந்திருக்கிறது. நான் வாய்ப்பாடு படித்த காலங்கள் நினைவில் வருகின்றன. எப்போதாவது என் கிராம பள்ளிக்கு போகும் போது சுவர்களில் இன்னும் எதிரொலிக்கிறது "ஓரெண்டு ரண்டு..." என்ற ராகத்துடன் கூடிய கல்வி....

கவிதையும் கவனமும்...

பார்வையற்ற குழந்தை
மரப்படிகளில் இறங்கி வந்து கொண்டிருக்கிறாள்
அவளுக்கு
அது ஒரு பிரச்சனையே இல்லை

அவளாகவே கற்பித்து கொண்ட
இந்த உலகின் ஒழுங்கில்
எழாவது படிக்கு பிறகு
ஒன்பதாவது படி
வராதவரை

பார்வையற்ற குழந்தை
நிதானமாகவே
படிகளிக் இறங்கி கொண்டிருக்கிறாள்

இந்த மனுஷ்யபுத்திரனின் கவிதையில் நீங்கள் உணர்வது என்ன... என்னுடன் விவாதியுங்களேன்....

இஸ்லாமும் ஜிகாத்தும்...

தனது நம்பிக்கையின் பொருட்டு துன்புறுத்தபடுகின்ற அல்லது ஒடுக்குமுறைக்கு உட்படுகின்ற ஒருவர் அடைக்கலமும், புகலிடமும் தேட உரிமை பெற்றவர். இவ்வுரிமை இன, மதம், நிற பாலின வேறுபாடின்றி அனைவருக்கும் உறுதிபடுத்தபட்டுள்ளது.

பௌதிக, பண்பாடு, பொருளாதார அரசியல் அம்சங்கள் அனைத்தையும் உள்ளீடாக கொண்டதே சுதந்திரம் என்னும் சொல். அது ஒவ்வொரு தனிநபர் மற்றும் மக்கள் திரளின் மறுக்கபடாத உரிமையாகும். இதனை காத்துகொள்ள தனக்குரிய அனைத்து வழிமுறைகளையும் பயன்படுத்தவும், ஆதரவை கோரி பெறவும் ஒரு தனி மனிதனுக்கோ அல்லது மக்களுக்கு உரிமை உண்டு.

ஒரு தொழிலாளிக்குரிய கூலி உடனடியாக வழங்கபடுவதுடன், அவருக்கு போதுமான ஓய்வும் உத்திரவாதபடுத்தபட வேண்டும்.இவை அவரது உரிமைகள் ஆகும்.

இஸ்லாமும் ஜிகாத்தும் என்ற புத்தகத்தின் சில கருத்துகள் இவை. இன்றைய இந்தியாவில் இவை எந்த அளவுக்கு முன்னிலை படுத்தபடுகின்றன என்பது உங்கள் கருத்துகளுக்கு பிறகு.

செக்ஸ் சர்வேக்களும் தொடரும் குழப்பங்களும்...

பெரும்பாலான செக்ஸ் சர்வேக்களை மேய்ந்ததில் கிடைத்த சில சின்ன சின்ன தகவல்கள். பெண்களின் செக்ஸ் கற்பனைகளை ஆண்டாண்டு காலமாக கட்டுபாட்டில் வைத்திருந்த ஆனாதிக்க சமுதாயம் அவளது கற்பனையை தனது தேவைக்கு ஏற்ப வரையறை செய்து இருக்கிறது. இந்தியாவின் சிறுநகரத்து பெண்கள் சமூக தளைகளை மீறி செக்ஸில் புரட்சி படைக்கிறார்கள். திருமணமாகாமல் தனியாக வாழும் பெண்கள் செக்ஸில் தெளிவு கொண்டு இருப்பதோடு, ஓரிய சேர்க்கையை மறுக்காமல் ஒத்து கொள்கிறார்கள் - வாழ்வில் கட்டுபாடுகள் இல்லாத செக்ஸ் தேவை என்பதை ஒத்து கொள்கிறார்கள். இவை அனைத்து இந்தியா டுடே, டுரெக்ஸ், மற்றும் காமசூத்திராவின் சர்வேக்களில் சொல்லபட்டது. ஆண்களை இந்த சர்வேக்கள் நவீன பிற்போக்குவாதிகள் என முத்திரைகுத்துகின்றன. ஆணின் செக்ஸ் ஆர்வங்கள் கடந்த ஆண்டுகளில் பின் தங்கிவிட்டதாகவே சொல்கின்றன. மேலும் ஆண்கள் தங்க்ள் செக்ஸ் குழப்பங்களை வெற்று நடிப்பு மூலமாக சரிகட்டி கொள்கிறார்கள். ஆணின் செக்ஸ் அறிவும் ஆசையும் குறைவாகவே இருக்கிறது. நேரடியா செக்ஸ் தவிர்த்து போர்னோகிராப்பி, இணையதளங்கள் ஆகியவை மூலமான போதுமான செக்ஸ் அறிவு இல்லாத குழப்பம் ஆண்களிடம் உள்ளது. பெண்கள் விருப்பபடும் பல்வேறு முறைகளான செக்ஸ் ஆண்களை பொருத்தவரை இன்னும் கையாளபடவே இல்லை. கற்பனைகளை வறண்ட பாலைவனமாகவே இன்றைய ஆணினின் செக்ஸ் வாழ்க்கை உள்ளது. இது பற்றி நான் சிலரிடம் விவாதித்த போது - பெரும்பாலானோர் வாழ்க்கைமுறையை குற்றம் சாட்டுகிறார்கள். விவாக முறிவுகளுக்கு, உறவின் கருத்து வேறுபாடுகளுக்கு செக்ஸ் குழப்பங்கள்தான் காரணம் என்பதை நாராயணமூர்த்தி உட்பட நிறைய மனநல மருத்துவர்கள் ஒத்து கொள்கிறார்கள். சமூக பிரச்சனைகள் கருதி காரணங்கள் வேறு வகையில் முன்வைக்கபடுகின்றன. எது எப்படியோ - எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் மனோபாவம் தொழிலில், வாழ்க்கை முன்னேற்றத்தில் மட்டுமல்ல செக்ஸிலும் தேவை என்பதை இக்கருத்து கணிப்புகள் எச்சரிக்கின்றன.

உறவுகளின் உணர்வுகளில்...

பிரோக்பேக் மவுண்டன்" என்ற திரைப்படம் சமீபத்தில் சில பிரிவுகளில் ஆஸ்கார் விருதுகளை பெற்றிருக்கிறது. இதனை பற்றி நிறைய விமர்ச்சனங்கள் எழுந்துள்ளன. அவற்றில் முக்கியமானது திரைப்படம் இரு ஆடவர்களுக்கு இடையே உள்ள உடல் சார்ந்த உறவு பற்றி பேசுகிறது என்பதாகும். இதில் எனக்கு சில குழப்பங்கள் உள்ளன. நான் பார்த்தவரை பாலுறவில் ஆண்-பெண் சார்ந்த விஷயங்களை விட, பெண்-பெண் சார்ந்த விஷயங்கள் அதிகமாக விலைபோகின்றன. இதனை பற்றி நிறைய கற்பனைகளும், பூடகமாக கருத்து கணிப்புகளும், ஆணித்தரமான முடிவுகளும் உள்ளன. பெறும் பாலும் இவை எல்லாம் ஆண்களால் சொல்லபட்டவை. பெண்-பெண் சார்ந்த உறவை சப்புகொட்டி கொண்டு கதவு சாத்தி கொண்டு பார்க்கும் ஆண் சமுதாயம் ஆண்-ஆண் உறவை பார்க்கும் பார்வையில் பெறும்பாலும் வெருப்பு மட்டுமே கொண்டுள்ளதாக நடிக்கிறது. யாகூ குழுமங்கள், தனியார் பார்ட்டிகள், மாடல் உலகம், சினிமா, அறிவு ஜீவி உலகங்கள், உலக பாரம்பரியங்கள், கவிதைகள், வரலாறு அனைத்திலும் ஓரின சேர்க்கை பற்றிய தகவல்கள் இருந்துகொண்டுதான் இருக்கின்றன. போலித்தனமான, அடிப்படைவாத நடிப்பை இன்னும் சமுதாயம் அரங்கேற்றி கொண்டு, அதனை எல்லாரும் நம்புகிறார்கள் என்று நினைப்பது வேடிக்கை. என்னை பொருத்தவரையில் ஆண் பெண் உறவோ, ஓரின சேர்க்கையோ, மூன்றாம்பாலின உறவோ - அவை உண்மையான நேர்மையான உணர்வுகளை, அன்பை பற்றி, காதலை பற்றி பேசினால் - அவை போற்றதக்கவை. அசிங்கமான ஏமாற்றுதனமான காதலா-காமமா என்ற குழப்பத்தில் இருக்கும் போலிகளுக்கு இவை எவ்வளவோ பரவாயில்லை. வெறும் நட்பு நட்பு நட்பு என்று ஏலம் போடும் போலிகள் - எல்லா உணர்வுகளுக்கும் செக்ஸ் அடித்தளமாக இருக்கிறது என்ற சிக்மண்ட் பிராய்ட் சித்தாதங்களை நம்புவதில்லை. மேலும் பேசினால் "நீயும் அப்படிதானோ...?" என்ற அபத்தமான கேள்வி வரும். இவர்களை பொருத்தவரை கோழிகள் பற்றி பேசுபவன் கோழி. கழுகுகளை பற்றி பேசுபவன் கழுகு.மனிதர்கள் பற்றி உணர்வுகள் பற்றி பேசுபவன் - கலாச்சார சீர்கேட்டுவாதி. என் அன்பு மிக்க, நண்பர்களே - உங்கள் அசிங்கமான முகமூடிகளை களைந்துவிட்டு கொஞ்சம் நிஜ உலகை பாருங்கள்.

சாக்கடைகளின் சதுரங்கம்.

நான் அரசியலில் பெறும்பாலும் ஆர்வம் காட்டுவதில்லை எனினும் தினம் தினசரி படிக்கும் ஒரு சராசரி அரசியல் பார்வையாளன். கடந்த 2 வாரகால தமிழக அரசியல் விளையாட்டுகள் தனிமனிதனின் அடிப்படை நேர்மையை குழப்பும் சங்கதிகளாகவே உள்ளன. குறிக்கோள் பற்றி பேசிய தலைவர்கள் அடிப்படை மானத்தை கூட அடமானம் வைத்த காட்சிகள், தொகுதி பங்கீடு என்ற அரசியல் பேரத்தில் தனி ஆதாயம் மட்டுமே தேடும் அரசியல் காட்சிகள், கூட இருந்தே குழிபறிக்கும் நேர்மையற்ற தந்திரங்கள், மக்களுக்காக என்ற அரசியல் நீரோடையை வெறும் சாக்கடையாக மாற்றிவிடுகின்றன. இது இன்று நேற்று அல்ல, பல வருடங்களாகவே நடந்துவரும் யாரும் தட்டி கேட்காத கேடு கெட்ட விளையாட்டு. அரசாங்கம் என்பது இந்த கரை வேட்டிகள் அல்ல. சட்டம், ராணுவம், காவல்துறை, சிறைச்சாலை, பொது நிர்வாகம் மற்றும் பாராளுமன்றமும் சட்டமன்றமுமே அரசாங்கம். அரசியல் எனப்படுவது மக்களின் நன்மைகளுக்காக, வளர்ச்சிகாக இந்த அரசாங்களை வழிநடத்தும் ஒரு கலை. தேர்தல் எனப்படுவது அத்தகைய கலையில் தேர்ச்சி பெற்றவர்களை முன்னிறுத்தும் முயற்சி. இன்றைய அளவின் அரசியல் பற்றி புதியதாக நான் எதுவும் சொல்லபோவது இல்லை. எல்லா அரசியல் கட்சிகளும் மக்களை சினிமாவிலும், சாராயத்தில் கட்டி போடவே முயற்சி செய்கின்றன. யோசிப்பவன் புரட்சிகாரன் என முத்திரை குத்தபடுகிறான். எதிர்ப்பவன் போராளி ஆகிறான். ஜனநாயக சமுதாயத்தில் இருக்கும் மக்களே கொஞ்சம் யோசியுங்கள். உங்கள் வாழ்க்கை, உழைப்பு, அறிவு, திறமை, எதிர்காலம் எல்லாம் யாரோ சில முட்டாள்களால், சந்தர்ப்பவாதிகளால் தீர்மானிக்கபடுகிறது. நாம் அனைவரும் வெறும் கைப்பாவைகள். சேகுவாராவையும் போராளி என்கிறார்கள், சந்தர்ப்பவதாகூட்டணியில் குளிர்காயும் நம் கைதேர்ந்த அரசியல் கில்லாடிகளையும் போராளி என்கிறார்கள். யார் போராளியோ இல்லையோ, நாம் அனைவரும் ஏமாளிகள். இந்த தேசத்தின் அழிவில் நம்மையும் பொருத்திகொள்ளும் கரையான்கள்.

20களின் இளமையும் சமுதாயத்தின் கதறலும்...

சமீபத்திய இந்தியா டுடே 20 வயது இளைய சமுதாயத்தின் வாழ்க்கை போக்கு குறித்து கவலைபட்டு இருந்தது. தெளிவான வாழ்க்கை ஞானம், தொழில் பற்றிய குறிக்கோள்கள், காதல் மற்றும் குடும்ப உறவுகளின் மேல் கொள்ளும் நம்பிக்கை ஆகியவற்றில் இளைய சமுதாயத்தின் கோட்பாடுகள் பெரும்பாலும் நிலையற்றதாகவே உள்ளன என்பதை நிறைய பத்திரிக்கைகளும், இணையமும், சில சினிமாக்களும், வாழ்வில் தினமும் எதிர்கொள்ளும் சில சம்பவங்களும் சொல்லி கொண்டுதான் இருக்கின்றன, தொழில் என்று மட்டும் இன்று குறிப்புக்கு எடுத்து கொண்டால், இளைய சமுதாயம் பெரும்பாலும் பணத்தை மட்டுமே அடிப்படையாக கொள்கிறது என்று கருத்து உள்ளது. இதில் எனக்கு உடன்பாடும் உள்ளது. எனினும் கொஞ்சம் தற்போதைய இளைய சமுதாயத்தின் வாழ்க்கையை பின்னோக்கி பார்த்தால், பள்ளி படிப்பில் இருந்தே பணம் சம்பாரிப்பதின் அவசியம் சொல்லியே குழந்தைகள் வளர்க்கபடுகிறார்கள்.தங்களுடைய குழந்தைதன்மையை பெரும்பாலும் இழக்கிறார்கள். 10வது, 12வது படிப்புகள் அறிவுக்காக இன்றி ஒரு போட்டி மனப்பான்மையுடன் செயல்படுத்தபடுகிறது. வெற்றிகள் பெரிய அளவில் தேவையில்லாமல் கொண்டாடபடுகின்றன. இந்த முதல் மார்க் அறிவாளிகள் எல்லாம் சில வருடங்களுக்கு பின்னால் என்ன ஆனார்கள், வாழ்வில், வாழ்வியலில் என்ன நிலையில் உள்ளார்கள் என யாரும் கவலைபடுவதில்லை. கடந்த 10 வருடங்களாக முதல் மார்க் வாங்கி பத்திரிக்கைகளில் பெயர்வந்த குழந்தைகளின் இன்றைய வாழ்க்கை நிலை குறித்து யாராவது கவனித்து இருக்கிறீர்களா..? நேர்மை, மன அழுத்தம், போதுமான விளையாட்டு மற்றும் சமூக கூட்டமைப்பு இல்லாமை ஆகியவற்றில் சிக்கி சீரழிந்து, நிறைய பணம் சம்பாரிக்கும், மனதளவில் எல்லாவற்றிலும் தோல்வியை காணும் கூட்டம் ஒன்றை இனம் காண்பீர்கள். நிறுவனம்ங்களும் போட்டி போட்டு சம்பளம் கொடுக்கின்றன. பாட்டன் அப்பாவின் மொத்த சம்பளமும் 2 மாதத்தில் வாங்கும் சம்பளக்கார விளையாட்டில் இளைய சமுதாயம் கொடிகட்டி பறக்கிறது. பணத்துக்காக வாழ், எதையும் செய் என குடும்பமும், சமுதாயமும் சொல்லி சொல்லி இளைய சமுதாயத்தை வளர்க்கிறது. பின்னர், இளைய சமுதாயம் புது பணத்தின் காரணமாக இழந்த சொர்க்கங்களை தேடும் போது குய்யோ முய்யோ என குடும்பமும் சமுதாயமும் கூக்குரல் இடுவதில் எந்த அர்த்தமும் இல்லை.

அன்பும், நேர்மையும், நல்ல வாழ்க்கை முறைகளும், அளவான முறையில் பணம் சார்ந்த வாழ்க்கையும், அறிவு சார்ந்த தேடுதலும் கொண்ட இளைய சமுதாயத்தை வளர்க்க குடும்பமும், இன்றைய சமுதாய அமைப்பும் முயற்சி கொண்டால், வருங்கால பாரதம் நிலைத்திருக்கும். இல்லையேல் இனிவரும் இளைய சமுதாயம் எல்லாம் வெறும் வான்கோழிகள்தான்.